tamilnadu

img

மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்

உளுந்தூர்பேட்டை, ஏப். 12-மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீட்டுச்சுவர்களில் அனுமதியின்றி மாம்பழம் சின்னம் வரைந்ததால் ஏற்பட்ட வாய் தகராறில் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் கொடூரமாக தாக்கப்பட்டார்.உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எம்.எஸ்.தக்கா கிராமத்தில் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சிபகதுல்லா என்பவர் மனிதநேய மக்கள் கட்சியின் உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தலைவராக உள்ளார். இங்கு இக் கட்சியை சேர்ந்தவர்களின் வீடு மற்றும் பிற இடங்களில் விழுப்புரம் மக்களவை தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சின்னமான உதயசூரியன் வரைவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்த ஜூல்பிகார்அகமதுபுட்டோ என்பவர் இந்த இடங்களில் கூட்டணி கட்சியான பாமகவின் மாம்பழம் சின்னத்தை அடாவடியாக வரைந்துள்ளார்.இந்நிலையில், 11ஆம் தேதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு உளுந்தூர்பேட்டை ஒன்றியம் முழுவதும் பிரச்சாரத்திற்கு வந்துள்ளார். அப்போது பிற்பகலில் ரவிக்குமாருக்கு ஆதரவாக இக்கிராமத்தில் அணி திரண்டு இருந்த மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களை பார்த்து அதிமுகவின் மேற் கண்ட பூட்டோ என்பவர் தகராறு வளர்க்கும் நோக்கோடு அவதூறாக பேசியுள்ளார். ஏன் இவ்வாறு பேசுகிறாய் என்று கேட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் ஒன்றியத் தலைவர் அப்துல்லா (35), பைசல் (21), தௌபிக் (19) உள்ளிட்டோர் மீது பூட்டோவும் அவருடன் இருந்த சிலரும் கடுமையாக இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சிபகதுல்லாவிற்கு தலையிலும் உடலிலும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அவருக்கும் மேலும் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பூட்டோ, சாதிக்பாட்சா, கல்லு என்கிற நிபாசாத்அலி உள்ளிட்ட 9 பேர் மீது புகார் அளிக்கப்பட்டும் எதிரிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் முஹம்மது அலி இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

;