politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் (என்சிஆர்பி) ஓராண்டுகால தாமதத்திற்குப் பிறகு திங்களன்று, குற்றச்சம்பவங்கள் குறித்த நாடு தழுவிய புதிய விபரங்களை வெளியிட்டிருக்கிறது. இதில், கும்பல் படுகொலைகள், செல்வாக்குப் படைத்த நபர்கள் மூலம் நடத்தப்படும் கொலைகள், நாட்டின் பல பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துக்களால் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்ட சாதிய ஆணவப் படுகொலைகள், மதரீதியான வன்முறை மற்றும் வெறியாட்டங்களால் நடத்தப்பட்ட படுகொலைகள் ஆகிய எவையும் பட்டியலிடப்படவில்லை. முதலில் இந்த அரசு, குற்றப்பதிவுகள் குறித்த புள்ளி விபரங்களை வெளியிடுவதில் தாமதம் செய்தது. வெளியிடும் போது, திட்டமிட்டு குறிப்பிட்ட முக்கிய அம்சங்களை தவிர்த்து வெளியிட்டிருக்கிறது. இதுதான் பாஜக அரசின் உண்மை முகம். புள்ளி விபரங்களை திரிப்பதிலும், மறைப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இவர்கள். முதலில் இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) பற்றி விபரங்களை திரித்து வெளியிட்டார்கள். அடுத்து நாட்டின் வேலையின்மை நிலைமை குறித்த உண்மையை மறைக்கும் நோக்கத்துடன் தவறான விபரங்களை வெளியிட்டார்கள். இப்போது குற்றங்கள் தொடர்பான விபரங்களிலும் அதே போன்று கைவரிசை காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவர்களது துரதிருஷ்டம் என்னவென்றால், குறிப்பிட்ட விபரங்களை மட்டுமே வெளியிட்ட போதிலும், அதிலும் கூட அவர்களால் அவர்களது உண்மையான கொடூர முகத்தை மறைக்க முடியவில்லை. பெண்கள், தலித்துகள் மீதான தாக்குதலிலும் ஒட்டுமொத்த குற்றங்கள் அதிகரிப்பிலும் முதலிடத்தில் இருப்பது பாஜகவின் உத்தரப்பிரதேசமே. நாம் சொல்லவில்லை, அவர்களது அறிக்கையே சொல்கிறது.