tamilnadu

img

கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் தமிழக அரசுக்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் வேண்டுகோள்

சென்னை, ஜூன் 13- தேசிய கல்விக்கொள்கை  வரைவுத்திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று கல்வி யாளர்கள், எழுத்தாளர்கள்,  பத்திரிகை யாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய கல்விக்கொள்கை வரைவு நகலில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்கள் மாநிலத்தின் உரிமை, இரு மொழிக்கொள்கை ஆகியவற்றை பாதிப்பதாக இருக்கிறது. எனவே இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  சென்னையில் புதனன்று (ஜூன் 12) செய்தியாளர்களிடம் பேசிய  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கூறியதாவது:- சென்னையில் காயிதே மில்லத் பன்னாட்டு ஊடகக் கல்வி நிறுவன த்தில் புதனன்று காலை புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது. இதில், முனைவர் வே. வசந்திதேவி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு,பேராசிரியர் அருணன்,பேராசிரியர் ச.மாட சாமி, பேராசிரியர் சுப.வீரபாண்டி யன், முனைவர் மா. இராசேந்திரன், முனைவர் தாவூத் மியாகான், தமிழ் மையம் ஜெகத்கஸ்பர், ‘புதிய குரல்’ ஓவியா, முனைவர் அருணா ரத்னம், மருத்துவர் அனுரத்னா ஆசிரியர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, வரலாற்றாசிரியர் கருணானந்தம், பேராசிரியர் ஹாஜா கனி, கல்விமணி கல்யாணி, பேராசிரியர் எம். சீனிவாசன், பேராசிரியர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி குலாம், பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி பூபாலன், மொழிபெயர்ப்பாளர் விழியன், பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன், ஆசிரியர் சுடர் ஒளி, பேராசிரியர் ‘மூட்டா’ கே. ராஜூ, மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், மருத்துவர் ரவீந்திரநாத், ஆசிரியர் உமா மகேஸ்வரி, மாணவர் சங்க நிர்வாகி நிரூபன், பெற்றோர் ஆசிரியர் மாணவர் கூட்டமைப்பின் அருமைநாதன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தகூட்டத்தில் மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.

மொழி பெயர்த்து தரவேண்டும்
தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு ஆவணத்தை மொழி பெயர்த்து மத்திய அரசு தரவேண்டும், மொழி பெயர்ப்புக்குப்பின் இந்த ஆவணத்தின் மீது விவாதம் நடத்தி கருத்து தெரிவிக்க ஆறுமாதகால அவகாசம் வழங்க வேண்டும்,  புதுதில்லியில் ஜூன் 22ல் நடைபெற உள்ள மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் சமூக நீதி, மாநில கல்வி உரிமை ஆகியவற்றிற்கு எதிராக உள்ள இந்த தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து எந்த தகவலும் இல்லை, ஆய்வு படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மவுனம் சாதிக்கப்படுகிறது, எல்லா மட்டத்திலும் வடிகட்டல் முறை பின்பற்றப்படுகிறது. பிஏ, பிஎஸ்சி உள்ளிட்ட எந்த பட்டப் படிப்பு சேர்வ தாக இருந்தாலும் நீட் போன்ற தேசிய தேர்வு முறைக்கு உட்படுத்தப்படும் நிலை உள்ளது. 12 ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு உயர்கல்வி மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படா மல் நுழைவுத்தேர்வின் அடிப்படை யில் தான் மேற்படிப்பு என்ற அவல நிலை உருவாகும் அபாயம் உள்ளது. நுழைவுத்தேர்வு முறையால் டீச்சிங் என்பது போய் கோச்சிங் வணிக கல்விமுறைதான் பிரதானப்படுத்தப்படும்.

அடித்தளத்து மக்கள் பாதிக்கப்படுவர்
சமூக களத்தில் முன்னேற்றம் கண்டுள்ள தமிழகத்தில் கட்டணம் செலுத்தித்தான் படிக்கமுடியும் என்பதால் ஏழைப் பழங்குடி, தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மருத்து வக்கல்வி முடித்து மருத்துவராக வெளியே வருவதற்கு முன்பே 4ம்  ஆண்டிலேயே வெளியேறும் (எக்சிட்) தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, சாமான்யர்களின் வாரிசுகள் கூட மருத்துவராகலாம் என்ற நிலை இந்த நீட் தேர்வு முறையால் தகர்க்கப்படு கிறது.  சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் கல்வியை சரக்காக பரிவர்த்தனைப்பொருளாக மாற்றும் முயற்சியாகத்தான் இந்த வரைவு கொள்கை பார்க்க முடிகிறது. கல்வி யில் சிறந்துவிளங்கும் பின்லாந்து நாட்டில் குழந்தைகள் 7 வயதில் தான் கல்வி கற்க துவங்குகின்றனர். இந்த கல்வி வரைவு திட்டத்தில் இந்தியாவில் 3 வயதிலிருந்து படிக்கும் நெருக்கடி உள்ளது. குழந்தைகள் தங்கள் மழலைப்பருவத்தை படிக்கும் பருவமாக மற்றும் அபாயம் உள்ளது.

ஜூன் 21ல் கண்டன இயக்கம் 
தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் உள்ள தமிழகத்தில் தற்போது மூன்றாவதாக இந்தி திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது, சமஸ்கிருதம் கட்டாயம் படிக்க வேண்டும் என இந்த வரைவு திட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. இதில் மாநில அரசின் சுயேச்சைத்தன்மை, வட்டார த்தன்மை மறுக்கப்படுகிறது. ஒற்றை த்தன்மை முன்னிறுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் ஒரே வகையான பாடத்திட்டம் கொண்டுவந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் வசம் கல்வியை தாரைவார்க்கும் நிலையை நோக்கி பயணிக்கிறது. மாணவர் நலன் மற்றும் சமூக நீதிக்கு எதிராக உள்ள தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு ஆவணத்தை இந்திய அரசு திரும்பப் பெற  வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 21.6.2019 அன்று போராட்டங்கள், இயக்கங்கள் நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.  பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர் ஜெ.கிருஷ்ண மூர்த்தி, தமுஎகச செயற்குழு உறுப்பி னர் கவிஞர் நா.முத்து நிலவன், கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் மூத்த பத்திரிகையாளர் அ.கும ரேசன் உள்ளிட்டோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.

;