குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தி.க தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த பேரணியில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் அமைதிமுறையில் பேரணியாகச் சென்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பேரணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், மக்களை மத ரீதியாக பிரிக்கும் சூழ்ச்சிக்கும் எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மோடி மற்றும் அமித்ஷாவின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு ராஜரத்தினம் ஸ்டேடியம் நோக்கி செல்கின்றனர்.