சென்னை, நவ. 20-
இம்மாதம் 25-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் விநியோகம் செய் கிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.
ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (1.5 விழுக்காடு கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (3 விழுக்காடு கொழுப்புச் சத்து), அதிகளவு விற்பனை யாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் (4.5 விழுக்காடு கொழுப்புச் சத்து) பச்சை நிற பாக்கெட்டில் விநியோகிக்கப்படும் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பால் என 4 வகை. மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 விழுக்காடு இடம் பெற்றுள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இது மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக அமைந்துள்ளது. பச்சை நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் (மார்க்கெட்டிங்) சுனேஜா கூறுகையில், பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் அதே விலையில் டிலைட் பால் விநியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16-ந் தேதி முதல் விநியோகத்தை தொடங்க வும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பாமக வேண்டுகோள்
தமிழ்நாட்டில் 4.5 விழுக்காடு கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை வரும் 25 ஆம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக 3.5 விழுக்காடு கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்யவும் ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத் தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பச்சை நிற பால் பாக்கெட்டை தொடர்ந்து வழங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.