tamilnadu

பொறியியல் படிப்புக்கு 61 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 8-பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய ஒரு வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலுள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக 43 இடங்களில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன.ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க உதவி செய்வதற்காகச் செயல்படும் இந்த மையங்களில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சென்று விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதால் 1.50 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வைத் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடு களையும் துறையின் இயக்குநர் தலைமையில் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணி முதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாட்கள், நேரம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் திட்டமிட்டு வருகிறார்கள்.மாணவர்கள் எவ்வித குழப்பமும் இல்லாமல் கல்லூரிகள் பாடப்பிரிவுகளைத் தெரிவு செய்யவும், ஒதுக்கீட்டு ஆணை வழங்கவும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன.

;