tamilnadu

img

3.20 லட்சம் புதிய மாணவர் சேர்க்கையில் சாதனை படைத்த அரசுப் பள்ளிகள்

சென்னை, ஏப். 25 - 2024-25ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் இதுவரை 3  லட்சத்து 24 ஆயிரத்து 884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள், 8 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி  நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், மாநில அரசின் பாடத்திட்டம், தேர்வுகள், விடுமுறை விதிகள் ஆகியவை அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இந்நிலையில் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, தமிழக அரசு, கோடை விடுமுறைக்கு முன்னதாக மார்ச் 1-ஆம் தேதியே துவங்கியது.

இதில், முதல் 5 நாட்களிலேயே  34 ஆயிரம் மாணவர்கள்  அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். அந்த வகையில், ஏப்ரல் 24 வரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 884 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.  

அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 793 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். குறைந்த பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 1,741 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ மற்றும் ‘நான் முதல்வன்’ திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு துவக்க- நடுநிலை- உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;