tamilnadu

img

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஈரோடு முதலிடம்

சென்னை, மே 8-மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு (11ஆம் வகுப்பு) முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் புதனன்று (மே 8) வெளியிடப்பட்டன. இதில் ஈரோடு மாவட்டம் 98.0 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதல் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.9 விழுக்காடு தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், கோவை 97.6 விழுக்காடு தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேல்நிலை முதலாம் ஆண்டுத் (11ஆம் வகுப்பு) தேர்வில் பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்கள் என 8,06,799 பேர் தேர்வுக்காக பதிவு செய்திருந்தனர். 4,35,176 மாணவிகள், 3,66,596 மாணவர்கள் என மொத்தம் 8,01,722 பேர் தேர்வு எழுதினர். பொது பாடப்பிரிவில் 7,47,819 மாணவர்களும், தொழிற் பாடப்பிரிவில் 53,953 மாணவர்களும் தேர்வு எழுதினர். மொத்த தேர்ச்சி 95 விழுக் காடாகும். 96.5 விழுக்காடு மாணவிகளும், 93.3 விழுக் காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.93.9 விழுக்காடு அறிவியல் பாடப் பிரிவிலும், 97.4 விழுக்காடு வணிகவியல் பாடப் பிரிவிலும், 95.1 விழுக் காடு கலைப் பிரிவிலும், 92.3 விழுக்காடு தொழிற் பாடப் பிரிவிலும் தேர்ச்சி பெற் றுள்ளனர். இயற்பியல் பாடப் பிரிவில் 94.6 விழுக்காடு மாணவர்களும், வேதியியல் பாடப் பிரிவில் 95.7 விழுக் காடு மாணவர்களும், உயிரியல் பாடப் பிரிவில் 97.1 விழுக்காடு மாணவர்களும், கணிதம் பாடப் பிரிவில் 96.9 விழுக்காடு மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவில் 91.1 விழுக்காடு மாணவர்களும், விலங்கியல் பாடப்பிரிவில் 93.3 விழுக்காடு மாணவர்களும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 98.2 விழுக்காடு மாணவர்களும், வணிகவியல் பாடப்பிரிவில் 97.7 விழுக்காடு மாணவர்களும், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவில் 97.7 விழுக் காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.2,896 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 2,721 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய 78 பேரில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப் பிட்டுள்ள கைப்பேசி எண் ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ் செய்தி) மூலமாகத் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித் தேர்வர்களுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படுகிறது.இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14 ஆம்தேதி பிற் பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16 ஆம்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங் களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11 ஆம் தேதி மற்றும் 13 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாகச் செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாகச் செலுத்தவேண்டும்.11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்களும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் 21 ஆம்தேதி வரை சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

;