tamilnadu

img

‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டுவீசி 106 ஆண்டுகள் நிறைவ.... நினைவிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை

சென்னை:
சென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி இன்றுடன் 106 ஆண்டுகள் நிறைவாக உள்ளதால் சென்னை உயர்நீதி மன்ற வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டை தனியாக எடுத்து நினைவிடம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.

முதலாம் உலகப்போர் 1914 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது.அப்போது இந்தியா ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. அதனால், முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை ‘மதராசப்பட்டினம்’ என்று அழைக்கப்பட்ட சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே அவர்களின் வாழ்வாதாரத்தை அமைத்திருந்தனர்.இதனால் ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது திரும்பியது. ஜெர்மனியின் ‘எஸ்.எம்.எஸ். எம்டன்’ என்ற நவீன போர்க் கப்பலில் 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை நோக்கி வீரர்கள் வந்தனர். கேப்டன் வான் முல்லர் தலைமையில், வந்த கப்பலில், திருவனந்தபுரத்தை சேர்ந்த தமிழ் குடும் பத்தை சேர்ந்த பொறியாளர் செண்பகராமன் என்ற வீரரும் இடம் பெற்றிருந்தார். ஜெர்மனியின் படையில் அவர் இருந்தபோதும், இங்கிலாந்தின் பிடியில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்ற சுதந்திர வேட்கையுடன் இருந்தார்.

செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 10 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் “எம்டன்” கப்பல் நிலைநிறுத்தப்பட்டது. இதை அறிந்த ஆங்கிலேயர்கள் (பிரிட்டிஷ்காரர்கள்) மின்சாரத்தை நிறுத்தி நகரையே இருளில் மூழ்கச் செய்தனர்ஆனால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த கலங்கரை விளக்கம் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச் சத்தை மையமாக வைத்து, ‘எம்டன்’ கப்பலில் இருந்து பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டுகள் வீசினர்.

இதில் சென்னை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் கிடங்கு கள் வெடித்து சிதறின. ஒரு குண்டு விழுந்து வெடித்ததில் சென்னை உயர்நீதிமன்ற சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது.மற்றொரு குண்டு வெடிக்காமல் நீதிமன்ற  வளாகத்திலேயே கிடந்தது. சேதத்தை ஏற்படுத்திவிட்டு ‘எம்டன்’ கப்பல் சென் னையை விட்டு ஆழ்கடலுக்கு சென்றது.ஆங்கிலேய கடற்படை பின்தொடர்ந்தும், ‘எம்டன்’ கப்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயே படைக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்த ‘எம்டன்’ கப்பல் 1914 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி கடைசியாக எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி கடலில் மூழ்கடிக்கப்பட்டது.சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய பகுதியான சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக் கப்பட்டுள்ளது.வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. குண்டு வீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய இடத்தை காட்டும் வகையில் உயர்நீதிமன்றத்திற்குள் நீதிபதிகள் செல்லும் வாசல் அருகில் உள்ள சுற்றுச்சுவரில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டு உள்ளது. இதில் ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நினைவு நாளில் மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.

சென்னையில் “எம்டன்” கப்பல் குண்டு வீசி செப்டம்பர் 22 (செவ்வாய்க் கிழமை) தேதியுடன் 106 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் சென்னையில் “எம்டன்” கப்பல் குண்டு வீசியதை நினைவுகூரும் தடயங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. சாதாரண மைல் கல்லைப்போலவே இதற்கான நினைவு கல்வெட்டு தேடிக்கண்டுபிடிக்கும் நிலையில்தான் உள்ளது. எனவே தமிழக அரசு “எம்டன்” கப்பல் குண்டுவீசிய இடத்தை அடையாளம் காட்டும் வகையில் புதிதாக நினைவிடம் அமைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

;