tamilnadu

img

இந்நாள் செப்டம்பர் 08 இதற்கு முன்னால்

1504 - மைக்கேலாஞ்சலோ-வால் உருவாக்கப்பட்டதும், உலகின் மிகச்சிறந்த கலைப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுவதுமான தாவீது சிலை, பியாஸா டெல்லா சிக்னோரியா சதுக்கத்தில் திறக்கப்பட்டது. இத்தாலியின் பிளாரன்ஸ் குடியரசில் 1475இல் பிறந்த மைக்கேலாஞ்சலோ, சிற்பி, ஓவியர், கட்டிடக்கலைஞர், கவிஞர் என்று பன்முகங்கொண்டு, மேற்கத்திய கலைத்துறையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். ஹீப்ரூ பைபிளின்படி குறிப்பிடப்படும் ஒருங்கிணைந்த இஸ்ரேலிய முடியரசின் மூன்றாவது அரசர் தாவீது. ஹீப்ரூ பைபிளை முக்கிய மூலமாகக் கொண்டே பைபிளின் பழைய ஏற்பாடு உருவானது. ஹீப்ரூ பைபிளில் கி.மு.1050-930 காலத்தில் இருந்ததாக குறிப்பிடப்படும் இந்த இஸ்ரேலிய முடியரசு, தொல்பொருள் ஆதாரங்களின்மையால், கற்பனையானது என்று நவீன வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

மிகப்பெரிய உருவங்கொண்ட பாலஸ்தீன வீரர் கோலியாத்தை, ஆயுதங்களின்றி, தனது கவண் வீச்சின்மூலம் தாவீது வீழ்த்தியதாக பைபிள் குறிப்பிடுகிறது. அவர் பயன்படுத்திய கவண் நாம் பயன்படுத்துவது போலன்றி, சிறிய பட்டையில் கூழாங்கல்லை வைத்து, சுழற்றி வீசக்கூடியது. தாவீது சிலையின் இடது தோளில் அந்தக் கவணும், வலது கையில் கூழாங்கல்லும் உள்ளன. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட தாவீது சிலைகள், கோலியாத்தைத் தோற்கடித்தபின், துண்டிக்கப்பட்ட தலை தாவீதுக்குகீழே கிடக்கும்படி உருவாக்கப்பட்டிருந்தன. கோலியாத்துடன் சண்டையிடும் முன்பு, அதற்குத் தயாராக இருக்கிற நிலையில் மைக்கேலாஞ்சலோ உருவாக்கிய, 17 அடி உயரமுள்ள இச்சிலை, ஒரே சலவைக்கல்லில் உருவாக்கப்பட்டது. 1464இல் இச்சிலை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டாலும், சிலை உருவாக்க உதவாது என்று இரண்டு சிற்பிகளால் ஒதுக்கப்பட்ட அந்தக் கல், கடைசியாகப் பணிகள் கைவிடப்பட்டபின் 26 ஆண்டுகள் பயனற்றுக்கிடந்தது. 1501இல் அதில் செதுக்கும் பணியைத் தொடங்கியபோது மைக்கேலாஞ்லோவின் வயது 26! பிளாரன்ஸ் பேராலயத்தில் மேற்பகுதியில், பல சிலைகளுள் ஒன்றாக நிறுவுவதற்காக உருவாக்கப்பட்டாலும், சிலையின் அழகை மக்கள் ரசிக்க வேண்டுமென்பதற்காக, அரசின் தலைமையிடமிருந்த இடத்தில் கீழேயே நிறுவப்பட்டது. 5,660 கிலோ எடைகொண்ட இச்சிலையை, உருவாக்கிய இடத்திலிருந்து அரை மைல் தொலைவிலிருந்த நிறுவுமிடத்திற்கு எடுத்துச்செல்ல 40 பேரும், நான்கு நாட்களும் தேவைப்பட்டன. 1873இல் இச்சிலை பிளாரன்சின் காலரியா டெல் அகாடமியா-வுக்கு மாற்றப்பட்டது. முதலில் சிலை நிறுவப்பட்ட இடத்தில் தற்போது நகல் ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், உலகம் முழுவதும் ஏராளமாக இதன் நகல்கள் நிறுவப்பட்டுள்ளன.