23 - விவசாயிகள் கலகங்களின் தொகுப்பாகக் குறிப்பிடப்படும் லூலின் கலகத்தின் ஒரு பகுதியாக, ஸின் அரச மரபைத் தோற்றுவித்த பேரரசர் வாங் மாங்-கின் அரண்மனை கலகக்காரர்களால் தாக்கப்பட்டது. ஹான் மரபின் உயர் அலுவலரும், பட்டத்தரசியின் தந்தையுமான வாங் மாங், ஆட்சியைக் கைப்பற்றி ஸின் மரபைத் தோற்றுவித்தார். வஞ்சகமாக ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டவர் என்றும், தொலைநோக்குடைய சமூக சீர்திருத்தவாதி என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் இவரைப் பற்றி வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன. இவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். அனைத்து நிலங்களும் அரசுக்குச் சொந்தமானவை என்று அறிவிக்கப்பட்டு, நிலப் பரிவர்த்தனைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டாலும், நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை தாங்களே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எட்டு பேருக்குக் குறைவான உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்துக்கு 150 ஏக்கருக்குமேல் நிலமிருந்தால், கூடுதலாக இருப்பதை ஏழை களுக்குப் பிரித்துக்கொடுத்துவிடவேண்டும். எட்டு என்ற எண்ணிக்கை, சீனாவின் மிகச்சிறந்த ஆட்சிக்காலங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் ஸாங் மரபின் ஆட்சியிலிருந்த நல்-நில முறையைப் பின்பற்றியதாகும். சீனாவில் மிக நீண்ட காலம் (790 ஆண்டுகள்) ஆட்சியை நடத்திய மரபான ஸாங் காலத்தில், சீனா பலவிதங்களிலும் செழித்தோங்கி யிருந்ததால், அதைப்போன்று மாற்ற வாங் மாங் விரும்பினார். நல்ல என்பதற்கான சீன எழுத்து # வடிவத்திலிருக்கும். அதைப்போன்று நிலம் நிர்வகிக்கப்பட்டதால் நல்-நில முறை என்ற பெயர் ஏற்பட்டது. எல்லா நிலங்களும் 9 சம சதுரங்களாகப் பிரிக்கப்பட்டு, சுற்றியுள்ள 8 சதுரங்கள் குத்தகைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அவற்றின் விளைச்சலை முழுமையாக அவர்களே எடுத்துக்கொள்ளலாம். நடுவிலுள்ள சதுரத்தில் 8 பேரும் இணைந்து உற்பத்தியில் ஈடுபடுவார்கள். அதன் விளைச்சல் நிலவுடைமையாளருக்கு வழங்கப்பட்டு, அதிலிருந்தே அரசுக்கு வரியும் செலுத்தப்படும். நிலச்சீர்திருத்தம் மட்டுமின்றி, ஆயுதம், மது ஆகியவற்றின் உற்பத்தியை அரசுடைமையாக்கியது, சீன வரலாற்றில் முதன்முறையாக வருமானவரி விதித்தது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 28 வகை நாணயங்களையும் அறிமுகப்படுத்தினார். பலவகை நாணயங்களைப் பயன்படுத்த மக்களுக்குத் தெரியாததால் ஏற்பட்ட குழப்பங்கள், பேரரசர் முற்போக்காளராக இருந்தாலும், அலுவலர்களின் ஊழல்கள் ஆகியவை கருவூலத்தைக் காலியாக்கியதுடன், பஞ்சமும் ஏற்பட்டதால், நிலத்தை இழந்த பெருநிலவுடைமையாளர்களும், எளிய மக்களும் லூலின் கலகத்தில் இணைந்தனர். கலகக்காரர்கள் லூலின் மலைப்பகுதியில் தங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது. கலகத்தில் பேரரசர் வாங் மாங்-கும், மகளும்(முன்னாள் பேரரசி!) கொல்லப்பட, 14 ஆண்டுகளில் ஸின் மரபின் ஆட்சி முடிவுக்குவந்து, மீண்டும் ஹான் மரபு ஆட்சியைக் கைப்பற்றியது.