tamilnadu

img

இந்நாள் ஜன. 30 இதற்கு முன்னால்

1847 - யெர்பா பியூனா நகரம், சான்ஃபிரான்சிஸ்கோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஓ(ஹ்)லோன் என்னும் வடஅமெரிக்கத் தொல்குடியினர் வசித்துவந்த, தற்போதைய சான்ஃபிரான்சிஸ்கோ பகுதியின் பெயர் ஆவாஸ்டே(குடாவிலுள்ள இடம்) என்று கூறப்படுகிறது. 1769இல் இப்பகுதிக்கு முதலில் வந்த ஐரோப்பியர்களான ஸ்பெயின் நாட்டவர்கள், இங்கு ஏராளமாக வளர்ந்திருந்த ஒரு மூலிகைச் செடியின் பெயர் ஸ்பானிய மொழியில் யெர்பா பியூனா என்பதால் அதையே இப்பகுதியின் பெயராகச் சூட்டினர். மூலிகை என்பதை நாம் மருத்துவ குணமுள்ளவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தினாலும், ஹெர்ப் என்ற ஆங்கிலச் சொல் மருத்துவ குணம் கொண்டவை, உணவுக்கு மணமூட்டக்கூடிய ஆனால் முதன்மை உணவுப்பொருள் அல்லாதவை, நறுமணத்திற்கு(பர்ஃப்யூம்) பயன்படுபவை ஆகிய அனைத்து, மரமல்லாத செடிகளையும் குறிக்கிறது. புல், செடி ஆகியவற்றைக் குறிக்கும் லத்தீன் சொல்லான ஹெர்பா என்பதிலிருந்து இந்த ஹெர்ப் உருவானது.

ஸ்பானிய மொழியில் யெர்பா பியூனா என்பதற்கு நல்ல மூலிகை என்பது பொருளாகும். தற்போது ட்ரேக்ஸ் குடா என்றழைக்கப்படுகிற பகுதியை அடைய எண்ணி, தற்போதைய சான்ஃபிரான்சிஸ்கோ குடாவை வந்தடைந்த ஸ்பானியர்கள், அதற்கு, ஃப்ரான்சிஸ்கோ என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிற, ‘அசிசியின் புனித ஃபிரான்சிஸ்’ நினைவாக ‘சான்(செயிண்ட்)-ஃப்ராசிஸ்கோ’ என்று பெயரிட்டனர். இதனால், இந்த இரண்டு குடாக்களுமே சான்ஃபிரான்சிஸ்கோ குடா என்ற பெயரிலேயே அக்காலத்தில் அழைக்கப்பட்டன. இவை அடங்கியிருந்த லஸ்-கலிஃபோர்னியா மாநிலம், 1821இல் ஆல்ட்டா(மேல்)-கலிஃபோர்னியா, பஜா(கீழ்)-கலிஃபோர்னியா என்று பிரிக்கப்பட்டது.

1821இல் ஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றபோது, ஆல்ட்டா-கலிஃபோர்னியா மெக்சிக்கோவுக்குக் கிடைத்தாலும், தொலைவிலிருந்த யெர்பா பியூனாவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எல்லைகள் தொடர்பான அமெரிக்க-மெக்சிக்கப் போரின்போது, 1846இல் இப்பகுதியை அமெரிக்கா கைப்பற்றியபின், யெர்பா பியூனாவின் பெயரை சான்ஃப்ரான்சிஸ்கோ என்று மாற்றியது. போர் முடிந்தபின் 1848இல் ஏற்பட்ட குவாடலூப் ஹிடால்கோ ஒப்பந்தத்தின்படி, ஒன்றரைக் கோடி டாலர் (க்கால மதிப்பில்!) மெக்சிக்கோவுக்குக் கொடுத்து, ஆல்ட்டா கலிஃபோர்னியாவை முழுமை யாகத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டது அமெரிக்கா. இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரான்சிஸ் ட்ரேக், உலகைச் சுற்றிவந்த பயணத்தில், 1579இல் அவர் தரையிறங்கிய இடம் (தற்போதைய)ட்ரேக்ஸ் குடாவாக இருக்கலாம் என்று நம்பப்படுவதால், அதற்கு ட்ரேக்ஸ் குடா என்று 1875இல் அமெரிக்க நில அளவைத்துறை பெயரிட்டது.

;