திருப்பூர், ஆக.14- ஊத்துக்குளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் திடலில் நான்கு நாட்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக விற்பனை நடை பெறும். இக்கண்காட்சியை ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சி.டி.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். ச.பெரியபாளையம் சன் பேக்கேஜ் எஸ்.சுரேஷ்மணி முதல் புத்தக விற்பனையை தொடக்கி வைத்தார். வேலன் ஆட்டோஸ் பி.கிருஷ்ணசாமி நூலை பெற்றுக் கொண்டார். இதில் வாசிப்பை சுவாசிப்போம் என்ற தலைப்பில் கவிஞர் உமா மகேஸ்வரி கருத்துரை ஆற்றினார். முன்னதாக கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ.கே.சி.தியாகராஜன் தலைமை வகித்தார். தமுஎகச செயலாளர் நந்தகுமார் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கே.வி.சுப்பிரமணியம், ஆர்.குமார் உள்பட புத்தக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். கே.பெரியசாமி நன்றி கூறினார்.