tamilnadu

சங்கத் தலைவர்களை பழிவாங்கும் என்எல்சிக்கு ஜி. ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

கடலூர், ஏப். 14-நெய்வேலி எட்டு ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-50 ஆண்டுகளுக்கும் மேலாக என்எல்சி நிறுவனத்தை பாதுகாக்க வீரம் செறிந்த போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். தற்பொழுது என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களை தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறது.கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முன்னின்றார் என்பதற்காக சிஐடியு துணைத் தலைவர் எஸ். திருஅரசை என்எல்சி நிர்வாகம் பழிவாங்கும் போக்கை கடைபிடிக்கிறது.அவர் பணி புரிந்த நகர அலுவலகத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்தது. 2017 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் பேரணிக்கு முன் முயற்சி எடுத்தார் எனக் கூறி மீண்டும் பணி மாற்றம் செய்தது. தற்போது, ராஜஸ்தானுக்கு பணி மாற்றம் செய்து மீண்டும் உத்தரவிட்டுள்ளது.பணிமாற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நெய்வேலிக்குள் ளேயே இருக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்ததன் அடிப்படையில் சிறிது அவகாசம் கொடுத்த நிர்வாகம் தற்போது பழைய பணியை செய்வதற்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. என்எல்சி நிர்வாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமான சிஐடியு தொமுச உடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனத்தில் சிறிய, சிறிய பிரச்சனைகளுக்கும், பணிமாற்றம் என்பது சரியல்ல.சிஐடியு பொருளாளர் சீனிவாசன் மீதும், சிஐடியு பொதுச் செயலாளர் ஜெயராமன் மீதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தொமுச உள்ளிட்ட சங்கங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். என்எல்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதை பார்க்கச் சென்ற நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீப காலமாக தொழிலாளர்களின் உரிமைகளுக்கு முன் நின்று போராடியவர்கள் மீது தனிப்பட்ட முறையில் ஒழுங்கு நடவடிக்கை, பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருவது சரியல்ல. தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலையை சில இயக்குநர்கள் செய்து வருகின்றனர். பழிவாங்கும் நடவடிக்கையை நிர்வாகம் திரும்பப் பெறாவிட்டால் உரிமைகளை பாதுகாக்க இறுதி வரை போராடி வெற்றி பெறுவோம்.இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் பேசினார்.

;