tamilnadu

img

சதுரகிரி காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்பு

திருவில்லிபுத்தூர், நவ.10- சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலுக்குச் சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரேதோஷத்தையொட்டி  சனிக்கிழமை 200-க்கும் மேற்பட்டோர்  சென்றனர்.  இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பெய்த  கனமழையின் காரணமாக கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 200 பேர் கோவிலிலேயே தங்கிவிட்டனர். 30 பேர் மலையிலிருந்து இறங்கி வந்துள்ளனர். சங்கிலிப்பாறை என்ற இடத்தில் அவர்கள் வந்துகொண்டிருந்தபோது திடீரென காட்டாறு வெள்ளம் வந்துள்ளது. இதில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். சனிக்கிழமை இரவு 11.30 மணி வரை சிக்கிய 30 பேரில் யாரும் மீட்கப்படவில்லை.

தகவலறிந்து சிவகாசி துணை ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஞாயிறு மாலை கிடைத்த தகவலின்படி கோவிலில் இருந்தவர்களும்,  சங்கிலிப்பாறை என்ற இடத்தில் சிக்கி தவித்தவர்களும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், வனத்துறையினர், மீட்புக்குழுவினர் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் கோவிலுக்குச் செல்ல நூற்றுக்கும் மேற்பட்டோர் மகாலிங்கம் கோவில் மலையடிவாரத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில், வெள்ளப்பெருக்கு குறைந்தபிறகு, இரண்டு நாட்களுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என சார் ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

;