கொரோனா, ஊரடங்கு ஆகிய துயரங்களோடு மேற்குவங்க மாநிலத்தை சமீபத்தில் ஆம்பன் புயலும் கொடூரமாக தாக்கியது. குறிப்பாக கிழக்கு மிட்னாபூர், வடக்கு 24 பர்கானா உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏராளமான கிராமங்களை ஆம்பன் புயல் சூறையாடியது.
********
ஏற்கெனவே எந்த நிவாரணமும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கிடைக்கப்பெறாத இப்பகுதி மக்கள், தற்போது புயலால் அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உணவு, உடைகள் உள்ளிட்ட பொருட்களை கொல்கத்தா உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் திரட்டிய இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக வடக்கு 24 பர்கானா, கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களின் துயரம் தோய்ந்த கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
********
இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ், மேற்குவங்க தலைவர்கள் பிரதிகூர் ரகுமான், ஸ்ரீஜன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்தக் கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று வீடு வீடாக மக்களைச் சந்தித்து வருகிறார்கள். சமூக சமையல் கூடங்களையும் அமைத்து உணவளிக்கத் துவங்கியுள்ளனர்.