tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் 2023 ஜூனுக்குள் முடியலாம் -பி.ஆர்.நடரா-ஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் 2023 ஜூனுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு, ஒன்றிய  அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், நாடுமுழுவதும் நடந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை,மேற்பார்வை செய்ய, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்களை நகர அளவில்,அமைக்கும் முடிவுகள் ஏதேனும் ஒன்றிய அரசுக்கு உள்ளதா என்றும், ஆம் எனில், அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். மேலும் கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி நிலைமை என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2016 ஜனவரியிலிருந்து 2018 ஜூன் வரையிலான காலத்தில் 100 ஸ்மார்ட் சிட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இதற்கான அமைப்பில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மேயர், உள்ளூர் இளைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்பட்டன என்றும், 2021 டிசம்பர் வரை இந்தக்குழுக்களுடைய 580 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், கோயமுத்தூரில் பத்து கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
மேலும் அவர், இந்தத் திட்டங்கள் அனைத்தும் கோயமுத்தூர் உட்பட நாட்டின் அனைத்து ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கான அமலாக்கக் காலம் 2023 ஜூன் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்குள் கோயமுத்தூர் உட்பட அனைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டங்களும் முடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
(ந.நி.)
 

;