tamilnadu

பொள்ளாச்சி விவகாரம்-காத்திருப்போர் பட்டியலுக்கு கோவை எஸ்.பி. மாற்றம்

கோவை, ஏப். 2-


பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காகவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு விளக்கமளித்தது.இந்நிலையில் பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகளாக இருந்த கோவை எஸ்.பி. பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் உள்ளிட்டோருக்கு பதில் வேறு அதிகாரிகளை பணியமர்த்தி தமிழக அரசின் உள்துறைசெயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள் ளனர். அவர்களுக்கு பதிலாக கோவை எஸ்.பி.யாக, கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பதவி வகிக்கும் சுஜித் குமாரும், பொள்ளாச்சி டி.எஸ்.பி.யாக நீலகிரி மாவட்டத்தில் குற்றப் பதிவேடுகள் துறை துணை கண்காணிப்பா ளராக பதவி வகிக்கும் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக கோவை மாவட்ட நக்சல்தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.



மாதர் சங்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி



இந்த உத்தரவு தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஏ. ராதிகாகூறுகையில்; பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேர்மையான விசாரனை நடைபெற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆரம்பம் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். குறிப்பாக, மார்ச் 4 ஆம் தேதி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மிகப்பெரிய அளவிலான அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனைத்தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்தினோம். இதனையடுத்து மார்ச் 19 ஆம் தேதியன்று பொள்ளாச்சி நகரம் முழுவதும் கடை அடைப்பிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். பின்னர் வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றியது.  இதன்பின்இவ்வழக்கு மீண்டும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அதிகாரிகளான கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், மற்றும் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் , பொள்ளாச்சி கிழக்குகாவல் நிலைய ஆய்வாளர் நடேசன் உள்ளிட்டவர்களை பணியிடை மாற்றம்செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

;