tamilnadu

img

கொரோனோ தடுப்பு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த எம்.எல்.ஏ - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறிய எம்.எல்.ஏ.,வின் கணவர்

கோவை, ஏப்.23- வால்பாறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு கலந்து கொள்ளாமல், தனது கணவரை அனுப்பி வைத்து அதிகாரிகளுக்கு ஆலோசனை கூற வைத்துள்ள சம்பவம் அதிகாரிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கிக் கிடக்கும் சூழலில், இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ,  இந்தியாவில் இந்த வைரசால் இதுவரை 600க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசை விரட்ட அதிகாரிகள் வரிந்து கட்டிக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். மேலும் தூய்மை பணிகள், நிவாரணப்பணிகளும் பல்வேறு இடங்களில் துரித கதியில் மேற்கொள்ளப்படுகிறது. இச்சூழலில் கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியானது கொரோனா தொற்று உள்ள பகுதியாக அறியப்பட்டுள்ளது.

இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வால்பாறையில் இருந்து யாரும் வெளியே வரவே, ஊருக்குள் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கெடுபிடியால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து கிடக்கின்றனர்.  இந்த சூழலில், அப்பகுதியில் துணை ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசுவுக்கும் கூட்டம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் , மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் சிரமங்களையும், அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் குறித்து அதிகாரிகளிடையே சட்டமன்ற உறுப்பினர் எடுத்துரைப்பார் என அதிகாரிகள் உள்ளிட்டோர் கருதிய நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினரான கஸ்தூரி வாசு அவர்கள் தனது கணவரை அழைத்து கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.  

இந்த சூழலில், எம்.எல்.ஏ. வின் கணவரும், முன்னாள் கிராம நிர்வாக அதிகாரியுமான வாசு கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னாலயே எம்.எல்.ஏ.,வும் வருவார் என்று நினைத்த அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிச்சம். இதன் பின்னர் 'சரி போனது போகட்டும், கூட்டத்தை நடத்தலாம்' என்று நினைத்து கூட்டத்தை தொடங்கினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இந்த கூட்டத்தில் ஆலோசனை கொடுத்தது எம்.எல்.ஏ.,வின் கணவர். மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டு மிக முக்கிய பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தும் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வின் கணவர் என்ற ஒரே ஒரு தகுதியை வைத்துக் கொண்டு வாசு அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்டதாகவும் தெரிகிறது.

இதனால் அதிகாரிகள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.  இது குறித்து, துணை ஆட்சியர் வைத்தியநாதனிடம் கேட்டபோது, "ஆலோசனை கூட்டம் எல்லாம் இல்லீங்க.. .. .. சும்மா பேசிட்டு இருந்தோம். எம் எல் ஏ கணவரும் வந்தாரு. அப்புறம் அவரிடமும் பேசிவிட்டு புறப்பட்டுவிட்டோம்" என்றார் மழுப்பலான பதிலுடன்.  பொதுவாக மக்கள் பிரதிநிதிகளாக பதவிகளை வகிக்கும் பெண்களின் கணவர்கள் அரசு நிர்வாகத்தில் மூக்கை நுழைப்பதும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினரின் கணவர் , அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கே உத்தரவிட்டது அதிகாரிகள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. (ந.நி)