tamilnadu

img

என்டிசி தொழிலாளர்களுக்கு ஜூன் 25-க்குள் ஊதியம்

கோவை:
என்டிசி பஞ்சாலையை இயக்குவது மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பாக கோவை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிலுவைஊதியத்தை ஜூன் 25 ஆம் தேதிக்குள்வழங்குவது என்று என்டிசி நிர்வாகம்உறுதியளித்தது.

கொரோனா ஊரடங்கை காரணம்காட்டி என்டிசி ஆலை நிர்வாகம் தொழி லாளர்களுக்கு முழு ஊதியம் வழங்காமல் பாதி சம்பளமாக வழங்க முடிவுசெய்தது. இதற்கு தொழிலாளர் தரப் பில் கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து  கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று  கோவைமாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், முழு ஊதியம் வழங்க வேண்டும். ஆலைகளை மீண்டும் தொடர்ந்துஇயக்க வேண்டும் என்கிற கோரிக்கைமுன்வைக்கப்பட்டது. அப்போது, நிலுவை சம்பளத்தை முழுமையாக ஜூன் 17 ஆம் தேதிக்குள் வழங்குவதாக நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை நிர்வாகம் வழங்கவில்லை. இதையடுத்து கடந்த புதனன்று (ஜூன் 17) கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில்என்டிசி தலைமையகத்தை தொழிற் சங்க தலைவர்கள், தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். மேலும் மாவட்டஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது,இல்லையேல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்டஆட்சியர் கு.ராசாமணி முன்னிலையில் வெள்ளியன்று பேச்சுவார்த்தைநடைபெற்றது.  இப்பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், என்டிசி நிர்வாகத்தின் தரப்பில் மேலாளர்கள் ராஜேந்திரகுமார், வெங்கடேஷ், சுதாகர் ஆகியோரும், தொழிற்சங்க தரப்பில் எல்பிஎப் பார்த்தசாரதி, ஐஎன்டியுசி சீனிவாசன், சிஐடியு சேவியர், ஏடிபி கோபால், ஏஐடியுசி ஆறுமுகம்,  எச்.எம்.எஸ்.டி.எஸ்.ராஜாமணி, எம்.எல்.எப். தியாகராஜன், என்.டி.எல்.எப்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர்கோவை நாடாளுமன்ற உறுப்பினர்பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்டிசி தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் ஆலைகளை இயக்குவது குறித்த முத்தரப்புபேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.இதில், ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஊதியத்தை வருகிற ஜூன் 25 ஆம் தேதிக்குள் வழங்குவது என்றும், தமிழகத்தில் உள்ள என்டிசி பஞ்சாலைகளை படிப்படியாக இயக்குவது என மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையை ஏற்று என்டிசி நிர்வாகம் இதனை நடைமுறைப்படுத்துகிறோம் என உறுதியளித்தனர். ஆகவே பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவேறியதாக தெரிவித்தார்.

;