tamilnadu

img

உழைப்பாளி மக்களை கையேந்த வைத்துவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதா? பி.ஆர்.நடராஜன் எம்.பி

கோவை, ஏப்.30 – 
ஊரடங்கு காலத்தில் உழைப்பாளி மக்களை கையேந்த வைத்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் சூழ்ச்சியை முறியடிப்போம். போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்க உழைப்பாளி வர்க்கம் ஒன்றினைய மே தின நாளில் சபதமேற்போம் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார். 
இது தொப்பாக அவர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் சிறப்பான மே தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஆண்டு மே தினம் தேர்தல் காரணமாக  சிறப்பான நிகழ்வாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு கடந்த நூறாண்டு காலத்தில் இந்த உலகம் சந்திக்காத வகையில் கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவரும் தனித்து இருக்க வேண்டும், வீட்டிலேயே இருக்க வேண்டும் என்கிற மருத்துவ காரணங்களுக்காக ஒன்றுகூடி இந்த மேதினத்தை கொண்டாட முடியாமல் தவிர்த்துள்ளோம். இருப்பினும் தொழிலாளி வர்க்கம் தனித்திருந்தாலும் தனது உரிமைக்கான குரலை வலுவாக எழுப்ப வேண்டி நிலையில் உள்ளோம்.

பாஜகவின் ஆறாண்டு கால ஆட்சியில் 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 நான்கு சட்டங்களாக சுருக்கியுய்யது. மேலும் இரண்டு சட்டங்களை திருத்தப்படுவதற்காக நிலைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது. இப்பொழுது இந்த கொரானா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி கொண்டு குஜராத் முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகள் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே கார்ப்பரேட் முதலாளிக்கு சாதகமாக செயல்படுகிற பாஜக மத்திய அரசு தற்போது இந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த ஒப்பு கொண்டு இருக்கிறார்கள் என்பதும், பாஜக ஆளும் சில மாநிலங்களில் அரசானையாகவே வெளியிட்டு இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே தினம் என்பதே 8 மணி நேர வேலை, 8 மணிநேர ஒய்வு, 8 மணிநேர உறக்கம் என்பதற்காக உலக தொழிலாளி வர்க்கம் போராடி வெற்றி பெற்ற உரிமைகளை கொண்டாடுகிற தினமாகும். இந்த மைய கருத்தையே அடித்து நொறுக்கும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திட முனைகிறது. இந்த புதிய நிலையில் போராடி தியாகம் செய்து பெறப்பட்ட உரிமைகளை தக்கவைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்த ஊரடங்கு காலத்தில் 40 கோடி உடல் உழைப்பு தொழிலாளர்களை திட்டமிட்டு மத்திய அரசு வஞ்சிக்கிறது. மறுபுறம் இந்திய நாட்டு மக்களை ஏமாற்றி மிக பெரிய அளவில் கடன்களை பெற்றுள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறது. நாட்டை விட்டு ஓடி போன 50 முதலாளிகளுக்கு ரிசர்வ் வங்கி 68 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருப்பது இந்நாட்டு மக்களுக்கு செய்திருக்கிற மிக பெரிய துரோகமாகும். இது மத்திய அரசுக்கு தெரியாமல் நடந்த ஒன்று அல்ல. பாஜக அரசு ஆரம்பத்திலிருந்தே இந்திய பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, அதன் பங்குகளை தனியாருக்கு விற்பது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்வது, வட்டியை தள்ளுபடி செய்வது, சலுகைகளை அள்ளி கொடுப்பது என்கிற வகையில் இந்த 6 ஆண்டு பாஜக ஆட்சி செயல்பட்டு வருகிறது.

இந்த 6 ஆண்டு காலத்தில் பாஜக அரசு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்காத அரசு என்பதும், இந்த அரசை எதிர்த்து நடத்துகின்ற போராட்டத்தில் உழைப்பாளி வர்க்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்கிற சூளுரையை இந்த மே தின நாளில் உறுதியேற்போம். போராடி பெற்ற உரிமைகளை தக்க வைப்பதும், எக்காரணம் கொண்டும் அதனை விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க ஒன்றுபட்டு போரிடுவோம். இந்திய நாட்டின் 40 கோடி உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு கொரானா காலத்தில் மத்திய அரசு செய்த உதவிகள் என்ன என்பதையும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. கொரானா காலத்தில் வேலை இழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 7500ரூபாய் வழங்க வேண்டும் என  சிஐடியு மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்க அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தது. வருவாய் இன்றி வீட்டிலே தனித்திருக்க வேண்டிய சூழலில் உடல் உழைப்பு தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்க இந்த தொகை என்பது அவசியமான ஒன்றாகும். இந்திய அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த பணத்தை நிச்சயமாக ஏற்பாடு செய்து கொடுத்து இருக்க முடியும். ஆனால் இந்த அரசிற்கு அதுகுறித்த எந்த கவலையும் இல்லை என்பது இவர்களது நடவடிக்கையில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் கொரானாவுக்கு பிந்தைய காலத்தை கணக்கிட்டு தேசத்தை பாதுகாக்க சில ஆலோசனைகளை முன் வைத்தனர். அவர்கள் முன் வைத்த ஆலோசனையில் முக்கியமானது இந்திய நாட்டு பெரு முதலாளிகளுக்கு 4 சதவீதம் வரி உயர்த்த வேண்டும் என்பது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை இந்த தேசத்தின் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வர பயன்படும் என்றார்கள். தேசப்பற்றோடு இவர்கள் முன்வைத்த ஆலோசனையை ஏற்பதற்கு மாறாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என மிரட்டுவது, வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. பெரு முதலாளிக்களுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் அவர்கள் மீது வழக்கு போடுவது என்பது, சிறையில் அடைப்பது என்று அச்சப்படுத்துகின்ற  நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆகவே இதுபோன்ற நிலையை  எதிர்த்தும், தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்றுப்பட்டு போராடுவோம் என இந்த மே நாளில் சபதமேற்போம் என பி.ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.

;