tamilnadu

img

ஏபிடி நிறுவனத்தில் போனஸ் உடன்பாடு....

கோவை:
ஏபிடி நிறுவனத்தில் 2019 - 2020 ஆண்டிற்கான போனஸ் உடன்பாடு புதனன்று எட்டப்பட்டது. கோவையை தலைமையிடமாக கொண்ட ஏபிடி பார்சல் சர்வீஸ், ஏஆர்சி, என்ஐஏ குரூப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1300  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான 2019 - 2020 ஆண்டிற்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களிடையே நடைபெற்று வந்தது. மூன்று சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் புதனன்று தற்செயல்விடுப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தது. இதனையேற்று தொழிலாளர்களும் விடுப்பு கடிதத்தை நிர்வாகத்திடம் அளித்தனர். 

இதனையடுத்து செவ்வாயன்று இரவு மீண்டும் தொழிற்சங்க தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் அழைப்பு விடுத்தது. கோவை பந்தய சாலையில் உள்ள ஏபிடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  சிஐடியுசார்பில் ஏபிடி சங்கத்தின் கௌரவ தலைவர் எஸ்.ஆறுமுகம், தலைவர் ஆர்.ஆறுமுகம், பொதுச்செயலாளர் எம்.அருணாச்சலம், ஐஎன்டியுசி சார்பில் பொதுச்செயலாளர் கே.என்.சண்முகசுந்தரம், பொருளாளர் விஜயகுமார் ஆகிய தலைவர்கள் பங்கேற்றனர். நிர்வாகத் தரப்பில்மனித வள மேம்பாட்டு அதிகாரி பி.கிருஷ்ணமூர்த்தி, முதன்மை மேலாளர் ஆர்.சண்முகநாதன், உதவி பொதுமேலாளர் பி.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதில் 2019 -2020 ஆம் ஆண்டிற்கான போனஸ் 12 சதவிகிதம் அளிப்பது எனவும்,  இதனை இரண்டு தவணையாக வழங்குவது எனவும், முதல் தவணை 8 சதவிகிதம் போனசை ஓரிரு நாட்களுக்குள் வழங்குவது எனவும்,இரண்டாவது தவணை மீதம்3.67 சதவிகிதத்தை பொங்கல்பண்டிகைக்கு வழங்குவதுஎனவும் உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்திட்டனர்.