கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக அறிவித்த பந்த் போராட்டத்திற்கு, பல்வேறு தரப்பு மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறு வழியின்றி பாஜக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.
கோவையில் தீபாவளிக்கு முந்தைய தினமான அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை பயன்படுத்தி எப்படியாவது மதரீதியான பதட்டத்தை உருவாக்க சங்பரிவார் அமைப்பினர் முயன்று வந்தனர். சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு மாறான பல தகவல்களை பரப்பி வந்தனர். ஆனால் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு தீபாவளியன்று எவ்வித பதற்றமுமின்றி மக்கள் மகிழ்சியாக கொண்டாடும் படியான நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த மாற்றமுமின்றி சகஜமாக இருந்து வருகிறது.
கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் நடத்திய சோதனையில் வெடி குண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வெடிமருந்து தயாரிக்கும் பொருட்களின் பின்னணி குறித்து விசாரிப்பதற்காக தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமையை விசாரிக்க பரிந்துரை செய்தது.
இந்நிலையில் எப்படியாவது கார்வெடிப்பு சம்பவத்தை வைத்து கோவையில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கும் விதமாக அக்டோபர் 26ம் தேதி, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து அக்டோபர் 31ம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என அறிவித்தனர்.
இதனையடுத்து பயங்கரவாதத்தை எதிர்ப்போம், கோவையை காப்போம். மீண்டுமொரு குண்டுவெடிப்பை கோவை தாங்குமா? வருகின்ற 31 ஆம் தேதி பாஜக நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தாரீர், ஆதரிப்பீர்! என கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசி வெளியிட்ட காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் கோவை மக்கள் பாஜகவின் இந்த அரசியல் நரித்தந்திரத்தை பார்த்து முகம் சுழித்தனர். ''அனைவருக்கு தேவை - அமைதியான கோவை'' ஒரு போதும் பிரிவினைக்கு இடமளிக்க மாட்டோம் என பலரும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அமைதியாக இருக்கும் கோவையில், மயான அமைதியை உருவாக்க பாஜக முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு வணிக பேரமைப்பினரோ கோவையில் அக்டோபர் 31 ஆம் தேதி கடைகளை திறக்கும் வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அதன் மூலம் பாஜக அறிவித்திருக்கும் பந்த் போராட்டம் அமைதிக்கு மாறாக பதட்டத்தையும், வன்முறையையும் உருவாக்கும் என தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தினர்.
அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பந்த போராட்டத்தை பயன்படுத்தி சங்பரிவார் அமைப்பினர் யார் ஒருவர் வன்முறையை தூண்டினாலும், அது மீண்டும் பதட்டத்தை உருவாக்கும். இந்த சம்பவத்தை மதகண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். பாஜக பந்த் போராட்டம் அறிவித்திருக்கும் அக்டோபர் 31 அன்று அனைத்து கடைகள் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் ஆணையைரை சந்தித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து கோவையின் அனைத்து பகுதி மக்களும் பாஜகவின் பந்த் அறிவிப்பு போராட்டத்தை காவல்துறையினர் அனுமதிக்க கூடாது என கோரி வந்தனர்.
இதனால் வேறு வழியின்றி பாஜக பந்த் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.