tamilnadu

img

பாலியல் வன்கொடுமை சட்டங்கள் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சியளித்திடுக

கோவை, ஏப். 29–காவல் துறையினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு பாலியல் சட்டங்கள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனஅனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி தலைமையில் அவ்வமைப்பினர் திங்களன்று கோவைமாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,. சமீபத்தில் துடியலூர் பன்னிமடையில் 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கியுள்ளரூ.3 லட்சம் நிவாரணம் போதுமானதாக இல்லை. அதனை உயர்த்தி வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாகஅரசு பணி வழங்கிட வேண்டும்.மேலும், கோவை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மக்கள் நெருக்கமுள்ள குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி, அதனை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

தனிநபர் கழிப்பிடங்கள் இல்லாத பகுதிகளில், இயற்கை உபாதைக்கு செல்லும் இடங்களில்தான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதால், தனிநபர் கழிப்பிட திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கழிப்பறை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில், போக்சோ சட்டத்தின் சாரம்சங்கள் குறித்து காவல்துறையினர் பலருக்கு தெரியாத நிலை உள்ளது. இதுபோன்ற பாலியல் குற்ற சம்பவங்களைக் குறைக்க பாலியல் நிகர்நிலை சட்டங்கள் குறித்து காவல்துறையினர், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.இதற்கு மாதம் ஒருமுறை மாவட்டஆட்சியர் தலைமையில் காவல்துறையினர், பெண்கள் அமைப்பினர், பொது நல அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தப்படும் பட்சத்தில், குற்றசம்பவங்களைக் குறைக்க முடியும். இன்று அனைத்து துறைகளும் ஆளும் கட்சிகளின் குறுகிய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என வேண்டுகோள் வைத்தது. குறைந்தபட்ச நியாயம் கிடைக்கும் என்பதற்காகவே சிபிஐவிசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். பொள்ளாச்சி விவகாரத்தில் மாதர் சங்கத்திடம் உள்ள ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கஉள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு உ.வாசுகி தெரிவித்தார்.முன்னதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் பங்கஜவல்லி, வனஜாநடராஜன், சுதா ராமர் மற்றும் வழக்கறிஞர் சீலாராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

;