tamilnadu

திருப்பூர் ,தாராபுரம் மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

திருப்பூரில் குழந்தைகளுக்குப் பனை ஓலை கைவினைப் பொருட்கள் பயிற்சி

திருப்பூர், மே 12 -திருப்பூரில் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் குழந்தைகளுக்கு தமிழ் பண்பாடு மையம் சார்பில் பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யும் இலவச பயிற்சி ஞாயிறன்று நடத்தப்பட்டது.கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அவற்றை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்றும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் வாரந்தோறும் இலவச கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த வாரம் குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியும், பனை ஓலை மூலம் பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி முகாமும் நடைபெற்றது. குழந்தைகளிடம் கதைகளின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இசை மற்றும் பாடல்கள் மூலம் கதை சொல்லப்பட்டது . அதேபோல பனை ஓலைகள் மூலம் குழந்தைகள் தாங்களாகவே தங்களது விளையாட்டுபொருட்களை தயார் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது இதில் மாணவர்கள் காற்றாடி , கண் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் செய்து அசத்தினர். 


கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள் மீது வழக்கு

தாராபுரம், மே 12 -தாராபுரத்தில் ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தாராபுரம் கொங்கு நகரை சேர்ந்தவர் காமராஜ் (44). இவர் தாராபுரம் அலங்கியம் ரோட்டில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது நிறுவனத்தில், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கோகுலகண்ணன் (35) என்பவர் வேலை செய்து வருகிறார். காமராஜ் நிறுவனம் சார்பில் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு செய்தல், ஓட்டுநர் உரிமம், பெர்மிட் வாங்குதல் போன்ற பணிகளை கோகுல்கண்ணன் செய்து வந்தார். இந்நிலையில் காமராஜ் அலுவலகத்திற்கு வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் நேரிடையாக தொடர்பு கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளை மேற்கொண்டுள்ளார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்துள்ளார். இதுகுறித்து காமராஜிற்கு தெரிந்ததும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி காமராஜை, கோகுலகண்ணன் மற்றும் அவரது தம்பி கோபி ஆகிய இருவரும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காமராஜ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காமராஜ் அளித்த புகாரின்பேரில் தாராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இன்று மின்தடை

அவிநாசி, மே 12-அவிநாசி ஒன்றியம் கானூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் திங்களன்று மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கானூர் அல்லபாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம் செட்டிபுதூர், ஆலத்தூர், பசூரின் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், ஆம்பேதி ஆகிய பகுதிகளில் திங்களன்று மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.