tamilnadu

கோவை முக்கிய செய்திகள்

கார்பைடு மூலம் பழுக்கவைத்த 351 கிலோ பழங்கள் அழிப்பு


கோவை, ஏப். 25-செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உள்ளிட்ட 351 கிலோ பழங்களை கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அழித்தனர். மாம்பழங்கள் கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கோவை கருப்பக்கவுண்டர் வீதி, பெரிய கடைவீதியில் உள்ள பழக்குடோன்களில் புதனன்றுஉணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் பழ குடோன்கள், சில்லரை மற்றும்மொத்தம் விற்பனை கடைகள் என 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் மாதுளை, ஆப்பிள் சேமிப்பு கிடங்குகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மற்றும் அழுகிய நிலையில்இருந்த 220 கிலோ மாம்பழம், 65 கிலோ ஆராஞ்சு, 32 கிலோ சாத்துக்குடி, 34 கிலோ மாதுளை என மொத்தம் 351 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது: செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 351 கிலோ பழங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உட்கொள்வதால் வயிற்று பிரச்சனை, வாந்தி, குடற்புண், தலைவலி, கேன்சர், நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் கோடை காலத்தில் நல்ல நிலையில் உள்ள பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டும். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் வெளித்தோற்றம் சீராக மஞ்சள் நிறத்தில் காணப்படும். மாம்பழத்தை வெட்டி பார்த்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உண்ணும் போது சுவையற்று இருக்கும். மாம்பழத்தை அழுத்தினால் கெட்டியாக, கடினமாக இருக்கும். இது போன்ற மாம்பழங்களை வாங்க வேண்டாம் என கூறினார்.


சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் 


சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேர் மனுத்தாக்கல்


கோவை, ஏப். 25-சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிஇடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 ஆம் தேதி துவங்கியது. மனுத்தாக்கல் செய்ய 29 ஆம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்தலில்முக்கிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் தேர்தல்மன்னன் என அழைக்கப்படும் நூர்முகமது கோமாளி வேடமணிந்து வந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து கள் இயக்கம் சார்பில் கதிரேசன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.இரண்டாம் நாளான்று ஈஸ்வர மூர்த்தி என்ற விவசாயி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மூன்றாம் நாளில் 3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நான்காவது நாளில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தங்கவேலு என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவ்வாறு வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய 4 நாட்களில் 7 பேர் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 


திமுக


இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி கூட்டணிகட்சிகளின் தலைவர்களுடன் வேட்புமனுவைதாக்கல் செய்ய உள்ளார்.

;