tamilnadu

திருப்பூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் தாயை காப்பாற்ற முயன்ற மகள் பலி

 திருப்பூர், ஏப். 21 -திருப்பூர் அருகே சனியன்று பிஏபி வாய்க்காலில் குளிக்க சென்ற தாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கலா. இவர் தனது மகள் சந்தியா மற்றும் உறவினர்கள் மரகதம், வள்ளி, சங்கீதா ஆகிய 5 பேரும் இணைந்து கொடுவாயில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனங்களில் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பி வரும்போது தாராபுரம் சாலையில் ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் நீர் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து, வாகனங்களை நிறுத்திவிட்டுக் குளிக்கச் சென்றனர்.முதலில் நீரில் இறங்கிய கலா நிலை தடுமாறி வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்ட அவரது மகள் சந்தியா (17) தனது தாயைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார். அவரும் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார். அவர்கள் இருவரையும் காப்பாற்ற மரகதம், வள்ளி, சங்கீதா என மூவரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் குதித்துள்ளனர். இதில் தாய் கலா மற்றும் மரகதம், வள்ளி, சங்கீதா ஆகிய நால்வரும் கரையோரம் மரக்கிளைகளைப் பிடித்து உயிர் தப்பினர். ஆனால் கலாவின் மகள் சந்தியா நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.பிஏபி வாய்க்காலில் தத்தளித்துக் கொண்டிருந்த நால்வரையும் பொது மக்கள் மீட்டனர். உயிரிழந்த சந்தியாவின் உடல் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;