tamilnadu

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

ஈரோடு,ஏப்.7-பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் புஞ்சை பாசனத்திற்கு 5ஆம் சுற்று தண்ணீர் ஞாயிறன்று திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகளில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நிலக்கடலை, எள் மற்றும் தீவன சோளம் பயிரிடுவதற்கு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி முதல் முறை தண்ணீர் விட்டு 6 சுற்றுகளாக தண்ணீர் திறக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று 5 ஆம் சுற்றுக்கு தண்ணீர் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டு  ஞாயிறன்று இரவுக்குள் நொடிக்கு 2300 கன அடி அதிகரிக்கப்பட உள்ளது. அணையின் நீர்மட்டம் 64.73 அடியாக உள்ளதால் திறக்கப்பட்டுள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் பயன் தருமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.