tamilnadu

img

மத்திய அரசின் தவறான கொள்கையால் ஜவுளி தொழில் முடக்கம்

தென்னிந்திய பஞ்சாலை சங்க (சைமா) செயலாளர் டாக்டர் கே.செல்வராஜீ, தீக்கதிருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் என்பது அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. ஒரே மாநிலத்தில்கூட ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. ஒரே தொழிலிலும், ஒவ்வொரு செக்டாருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. ஒரு செக்டாருக்குள்ளும், ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இதேபோல், மத்திய சட்டம் ஒரு மாதிரியாக இருக்கிறது, மாநில சட்டம் ஒரு மாதிரியாக இருக்கிறது.


உதாரணத்திற்கு, டெக்ஸ்டைல் அப்ரண்டீஸ்க்கு குறைந்தபட்ச கூலி ரூ.433.80. ஆனால், மத்திய அரசின் சட்டத்தில் வெறும் ரூ.176தான் இருக்குது. இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் மாறுதல் வர வேண்டும். மேலும், தாராளமயக் கொள்கைகள் அமலாக்கத்திற்கு பிறகு போட்டியில் நிலைக்க முடியவில்லை. பஞ்சிற்கு அடுத்து தொழிலுக்கு மிக முக்கியமானது மின்சாரம். 2003ல் கொண்டு வரப்பட்ட மின்சார சட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்படவில்லை. அதனால் ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. மத்திய அரசு ஓபன் ஏக்சஸ்ன்னு கொண்டு வந்தாங்க. அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் மத்திய அரசே 20 சதவிகிதம் வரி கொண்டு வந்துள்ளது. இது தவறானது. இதனால் தொழில் வளர்ச்சியடைய முடியவில்லை. பஞ்சு 2007ல் அத்தியாவசிய பொருள் சட்டத்திலிருந்து ஜவுளி பொருட்களை வெளியில் எடுத்ததற்குப் பிறகு சர்வதேச வியாபாரிகள் பஞ்சு முழுவதையும் வாங்கிக் கொள்கிறார்கள். மூலப்பொருளான பஞ்சு இந்தியாவில் 4 மாதத்திற்கு மட்டும்தான் விற்பனைக்கு வருகிறது. மீதம் 8 மாதத்திற்கு சர்வதேச வியாபாரிகளிடமி ருந்துதான் வாங்க வேண்டியுள்ளது. அவர்கள் வாங்கி இருப்பு வைத்து விலையை உயர்த்தி விடுகின்றனர்.


இந்த ஆண்டு ரூ.48 ஆயிரத்திற்கு விற்றது. பின்னர் ரூ.42 ஆயிரத்திற்கு வந்தது.இப்போது மீண்டும் ரூ.48 ஆயிரத்திற்கு வந்து விட்டது. ரூ.50 ஆயிரத்திற்கு மேலேயும் போகும் என கூறப்படுகிறது. இதனால் ஜவுளி தொழில் நட்டத்தில் தான் இயங்கும். குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்ட போது, நாங்க என்ன சொன்னோமென்றால், சமதளத்தை உருவாக்கி கொடுங்கள் என்றோம். சர்வதேச வியாபாரிகளுக்கு 2 சதத்திலிருந்து 3 சதவிகித குறைந்த வட்டியில் வெளிநாட்டு கடன் கிடைக்கிறது. நம் நாட்டில் வீடு வாங்கவும், கார் வாங்கவும் 6லிருந்து 9 சதவிகிதம் வட்டியில் கடன் தருகிறார்கள். ஆனால் தொழிலுக்கு 11 விழுக்காடு வட்டி கேட்கிறாங்க. மூலப்பொருளான பருத்திக்கு 7 விழுக்காட்டிற்குள் கடன் கொடுங்கள் எனக் கேட்டோம். இந்த அரசு வழங்கவில்லை. 3 மாதங்களுக்குத் தான் கடன் கொடுக்கிறார்கள். அதற்கும் 25 சதவிகிதம் மார்ஜின் கேட்கிறார்கள். பருத்தி, ஜவுளி தொழில் ஸ்திரதன்மை இல்லாமல் போனதற்கு இதுவும் காரணம். நடப்பு மூலதனத்தை மறு சீரமைக்க 5 சதவிகித வட்டி மானியம் அல்லது 7 சதவிகித நபார்டு உதவி வழங்கலாம். மில்லில் கொடுக்காமல் போனால்கூட, விவசாயிக்கு கொடுத்தால் விலை அதிகமாகக் கிடைக்கும். அடுத்து உலகமயத்திற்கு ஒப்பந்தம் போட்டோம். போட்டோம். வெளிநாட்டு வர்த்தக (குகூஹ)த்திற்கு மன்மோகன் சிங் காலத்திலிருந்து முயற்சிக்கிறோம். இன்னும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு போக முடியவில்லை.


பங்களாதேஷ் போன்ற நமது அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். அதற்கும் 36 சதவிகித வரி போடுகிறார்கள். அவர்கள் வட்டியில்லாமல் இறக்குமதி செய்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாட்டுடனும் இணக்கமாக போகணும்னா வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடுவதால் முதலில் பாதிக்கப்படுவது ஜவுளித்துறையினர் தான். கடந்த ஆட்சியிலும் இதுதான் நிலைமை. இந்த ஆட்சியிலும் இதுதான் நிலை. 2 கோடி விவசாயிகள் உற்பத்தி செய்யும் பஞ்சை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளது இந்த அரசு. 4, 5 பேர் தயாரிக்கக்கூடிய விஸ்கோஸ் பஞ்சு (பாலியெஸ்டர்) ஏற்றுமதி செய்யும் போது சர்வதேச விலைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். நமக்கு 25 சதவிகித வரி. சீனா உலக ஜவுளி சந்தையில் 35-38 சதவிகிதம் இருக்கிறார்கள். நாம் உலக மக்கள் தொகையிலும், ஜவுளி தொழிலும் இரண்டாமிடம் என்றாலும், சீனா இவ்வளவு வளர்ந்தள்ளது. நாம் ஏன் வளர முடியவில்லை? நேர்முக வரிகள் போக மறைமுக வரிகளும் விதிக்கப்படுகிறது. நாம் செலுத்துகிறோம். இதை எல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். மூலதனம் அதிகம் போடக்கூடிய தொழில் நசிவை பற்றி அரசுகள் கவலைப்படுவதில்லை. எனவே, அதிகாரிகளும், அரசாங்கமும், வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்ட கொள்கையையே கொண்டுள்ளன. இளைஞர்கள் ஜவுளி தொழிலுக்கும், ஜவுளி தொழில் வேலைக்கும் வருவதில்லை. காரணம் என்னவென்றால் வருமானமில்லை. எனவே சட்டங்களை சீரமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.சந்திப்பு - சக்திவேல்.

;