கோயம்புத்தூரில் பள்ளி சிறுவர்கள் முஸ்கான், ரித்திக் ஆகியோர் படுகொலை வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். ஜவுளிக்கடை அதிபர். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 11 வயது மகளும், 8 வயது மகனும் இருந்தனர்.
இவர்கள் 2 பேரும் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் தினமும் பள்ளிக்கு கால்டாக்சியில் செல்வது வழக்கம். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி அவர்கள் பள்ளிக்கு சென்ற போது கடத்தி செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இரு குழந்தைகள் கொலை தொடர்பாக கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மோகன்ராஜை போலீசார் பொள்ளாச்சிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது வெள்ளலூரில் அருகே தப்பி ஓட முயன்றதாக கூறி மோகன் ராஜை காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது
இதைத்தொடர்ந்து மனோகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி மனோகரனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தார்.