tamilnadu

img

நூலகத்தில் கோடைகால சிலம்பம், களரி சிறப்பு பயிற்சி

உடுமலை, ஏப்.24-உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் கோடைகால இலவச சிலம்பம் மற்றும் களரி, ஸ்கேட்டிங் சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் சி.அசோகன் வழங்கினார்.உடுமலை உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள கிளை நூலகத்தில் மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க வாரந்தோறும் ஞாயிறன்று சிலம்பம், களரி, சதுரங்கம் மற்றும் ஓவியப் பயிற்சிகள் வழங்கப்பட்டு   வருகின்றன. கோடைகால விடுமுறையில் மாணவ,மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பத்து நாட்கள் தொடர்ந்து சிலம்பம், களரி, ஸ்கேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டன. பயிற்சிகளை பகத்சிங் சிலம்பம், களரி மார்ஷியல் அசோசியேஷன் செயலாளர் சு.வீரமணி, ஸ்கேட்டிங் பயிற்சிகளை ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமியும் வழங்கின. அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14ஆம் தேதி துவங்கிய இப்பயிற்சி முகாம் ஏப்.24ஆம் தேதியன்று நிறைவு பெற்றது. உடுமலை மகாத்மா காந்தி உண்டு, உறைவிடப் பள்ளி வளாகத்தில் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்.பி.அய்யப்பன் தலைமை வகித்தார். நூலகர் வீ.கணேசன் வரவேற்றார். வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.கே.சிவக்குமார், பொருளாளர் ஈ.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகத்சிங் சிலம்பம் மற்றும் களரி பயிற்சி செயலாளர் சு.வீரமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக உடுமலை வருவாய் கோட்டாட்சியர் .சி.அசோகன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அவர் பேசுகையில், விளையாட்டில் மாணவ மாணவியர் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கு இதேபோன்று பயிற்சி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் கோபுரம் சிட்ஸ் மேலாளர் பி.சுப்ரமணியன், அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் திருமாவளவன், கல்வியாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குகான ஏற்பாடுகளை நூலகர்கள் அருள்மொழி, செல்வராணி மற்றும் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

;