tamilnadu

நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்!

திருப்பூர், மே 3 -பள்ளிக் கல்வித்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி திருப்பூர் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. மாணவர்கள் புகார் அளிப்பதை எல்லாம் கணக்கில் கொள்ள மாட்டோம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறுகிறார். கோடை வெயில் கடுமையாக இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும், விடுமுறை காலத்தில் மாணவர்கள் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தியும் பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டிருப்பதுடன், சுற்றறிக்கையும் அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி கோடை விடுமுறை காலத்தில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.ஆனால் நீதிமன்றம், பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு பல்வேறு முன்னணி தனியார் பள்ளிகள் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். குறிப்பாக 9ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு சிறப்பு வகுப்புகளும், 11ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 12ஆம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.மாணவர்களுக்கு நல்ல கல்விச்சூழலையும், ஆரோக்கியமான போட்டியையும் ஏற்படுத்துவதற்கு மாறாக, மதிப்பெண்ணை மட்டும் கருத்தில் கொண்டு இயந்திரகதியாக ஓடக்கூடியவர்களாக மாற்றும் வகையில் தமிழக தனியார் பள்ளிகள் மாறியுள்ளன. இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை செயலராக உதயச்சந்திரன் இருந்தபோது, மாணவர்களை மாநிலத்தில், மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் முன்னிலைப்படுத்தி விளம்பரம் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இத்தகைய மதிப்பெண் போட்டி என்பது தனியார் பள்ளிகள் தங்களைச் சிறந்த, தரமான பள்ளிகளாக காட்டிக் கொண்டு வியாபாரப் போட்டியில் ஈடுபடுவதற்கு தூண்டுதலாக இருக்கின்றன. இதனால் படிக்கும் மாணவர்களின் கல்விச் சிறப்பும், தரமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதிக மதிப்பெண் பெற வைக்கும் முதன்மையான பள்ளி என்ற தோற்றத்தை காட்டுவதற்கு தனியார் பள்ளிகள் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றன. இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாறியுள்ளன. மதிப்பெண் அடிப்படையில் வெறித்தனமான போட்டியைத் திணிக்கும் இத்தகைய நிலை மாணவர்களுக்கு மனச்சிதைவை ஏற்படுத்தி தற்கொலைக்குத் தள்ளும் நிலை அதிகரித்தது. எனவே மதிப்பெண்களை முதன்மைப்படுத்தி தனியார் பள்ளிகள் விளம்பரம் கொடுப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்தது தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் மாணவர்களை மதிப்பெண் குதிரைகளாக மாற்றி ஓட வைப்பதற்காக, சிறப்புப் பயிற்சி என்ற பெயரில் கோடை விடுமுறை நாட்களிலும், காலை முதல் இரவு வரை சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்கும் தடை விதிக்கப்பட்டதை கல்வியாளர்கள் வரவேற்றனர்.எனினும் அரசின் உத்தரவு காரணமாக தங்களை முன்னணி பள்ளிகளாகக் காட்டிக் கொள்ள முனையும் தனியார் பள்ளிகளின் வியாபார நலன் பாதிக்கப்படுவதால் அரசு உத்தரவை கொஞ்சம், கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் தங்கள் பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரத்தையோ, சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் புகைப்படத்தையோ விளம்பரம் செய்யாமல் தவிர்த்த பள்ளிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விளம்பரம் வெளியிட தொடங்கினர்.

அதில் அரசின் உத்தரவின் நோக்கத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தங்கள் பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரம், படங்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளன. அதேபோல் சிறப்பு வகுப்புகளும் பெரும்பாலான பள்ளிகளில் நடத்தப்படுகின்றன.கடந்த ஏப்.29ஆம் தேதி 10ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், தனியார் பள்ளிகள் நாளிதழ்களில்விளம்பரங்கள் கொடுப்பது பற்றி திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, தங்கள் பள்ளி அளவில் மதிப்பெண் விபரங்களை குறிப்பிட்டு விளம்பரம் கொடுத்தால் தவறில்லை என்று கூறினார். அதேசமயம் மாநில, மாவட்ட அளவில் தங்கள் பள்ளி முதலிடம், இரண்டாமிடம் பெற்றது என்று குறிப்பிடக் கூடாது என்றும் தெரிவித்தார். ஆனால் பெரும்பாலான பள்ளிகள் மதிப்பெண் விபரத்தை கொட்டை எழுத்துகளில் பெரியதாக வெளியிடும்போது, இயல்பாகவே அவற்றை பிற பள்ளிகளின் விளம்பரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் நிலை இருப்பதைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை. இந்நிலையில் நாளிதழ் விளம்பரங்கள் கொடுப்பதற்கு பதிலாக துண்டறிக்கையாக வெளியிட்டு சில பள்ளிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதில் மாநில அளவில், கல்வி மாவட்ட அளவில் தங்கள் பள்ளி முதலிடம் என்று அச்சிட்டு விளம்பரப்படுத்தி உள்ளனர். எனினும் இந்த விதிமீறல் மீது மாவட்ட கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோதும், முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, அவை நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் என்று சொல்லி சமாளித்தார். ஆனால் மருத்துவ கல்விக்கு மட்டுமே அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு நீட் வகுப்பு நடத்தப்படுகிறது.

ஆனால் கலைப் பாடங்களை எடுத்துப் படிக்கக்கூடியவர்களுக்கும், 9ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு செல்லக்கூடியவர்களுக்கும் சிறப்பு வகுப்பு நடத்துவதைப் பற்றி கேட்டால் அதற்கு பதில் அளிப்பதை முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தவிர்த்தார்.பள்ளிக் கல்வித்துறை உத்தரவை மீறுவதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே ஒத்துழைப்பு அளிப்பது வியப்பாக இருந்தது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்துவது பற்றி நேரடி ஆய்வு செய்வீர்களா என்று கேட்டதற்கு, புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களிடம் எழுதி வாங்கி இதுபோன்ற சிறப்பு வகுப்புகளை நடத்தும் நிலையிலும், சில பெற்றோர்கள் இதை விரும்பாவிட்டாலும் நிர்வாகம் கட்டாயப்படுத்தும் சூழ்நிலையில் புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, மாணவர்கள் புகார் கொடுப்பதை எல்லாம் வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அலட்சியமாக பதில் கூறினார். ஆக கோடை விடுமுறையில், அதுவும் அக்னி நட்சத்திரம் என கோடை வெயிலில் உக்கிரமாக இருக்கக்கூடிய விதிமுறைக்கு மாறாக, மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே ஆதரவாக இருக்கிறார், மாவட்ட நிர்வாகமே பள்ளிக் கல்வித்துறை மற்றும் நீதித்துறையின் உத்தரவை அலட்சியப்படுத்தி காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.              (ந.நி)

;