மணிலா
190-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தினமும் 1000-க்கும் மேற்பட்டோரைப் பலி வாங்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் சமூக விலகல் என்னும் ஊரடங்கைக் கடைப்பிடித்து கொரோனவை விரட்டத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டர்டே ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டுட்டர்டே, "ஊரடங்கு உத்தரவை மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். இந்த உத்தரவை மீறி, சுகாதார பணியாளர்கள், மருத்துவர்களுக்கு இடையூறு செய்வது மிகப்பெரிய குற்றம் ஆகும். ஊரடங்கை மீறுவோர்களால் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, அவர்களைச் சுட்டுக் கொல்லுங்கள் என காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு உத்தரவிடுகிறேன்" என எச்சரித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் குயிசான் நகருக்கு அருகே உள்ள குடிசைப்பகுதி மக்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை எனக் கூறி நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். அதனைக் கண்டிக்கும் வகையில் ரோட்ரிகோ டுட்டர்டே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை 3000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.