பிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் சிக்கி 58 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாடின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் நேற்றுமுன் தினம் 'மேகி’ என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டது. 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, அந்நாட்டின் லெய்டி மாகாணம் பேபே நகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைசில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளம், நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.