tamilnadu

அவிநாசி மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

பருத்தி ஏல தேதி மாற்றியமைப்பு


அவிநாசி, ஏப். 24-அவிநாசி, தாராபுரம், சத்தி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பருத்தி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் பருத்தி சீசன் துவங்கியது. இதனால், அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் அதிகளவு பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.பிரதி வாரம் 4 ஆயிரம் மூட்டைக்கு அதிகமாக பருத்திவிற்கப்பட்டது. தற்போது பருத்தி சீசன் குறையத் துவங்கியிருக்கிறது. செவ்வாயன்று நடந்த ஏலத்தில் 2,500 மூட்டை பருத்தி வரத்தாக இருந்தது. இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டாலுக்கு ரூ.5,600 முதல் ரூ.6,390 வரையும், மட்ட ரகம் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விற்கப்பட்டது. இந்த ஏலத்தில் 387 விவசாயிகள், 13 வியாபாரிகள் பங்கேற்றனர். 41.43 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 வரை விலை குறைந்தது.இந்நிலையில் அடுத்த வாரம் முதல் தேதி மே தினம் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து 2ஆம் தேதி ஏலம் நடக்கும் என விற்பனை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


கைப்பேசியில் செல்பி எடுத்து மிரட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை


ஈரோடு, ஏப். 24-ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கைபேசியில் செல்பி எடுத்து மிரட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த 15 வயதுமாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின்பெற்றோர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி திங்களன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுமுடி காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொடுமுடி தேவம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி மகன் நந்தகுமார் (22) மாணவியிடம் பழகி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நந்தகுமாரை காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நந்தகுமார் மாணவியை கைபேசியில் படம் எடுத்ததும், அதனை இணையதளத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்டார். இதனையடுத்து நந்தகுமார் மீது காவல்துறையினர் போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செவ்வாயன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நந்தகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

;