tamilnadu

‘பாசமிகு’ பாசிச பாஜக

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தனி ஆளாகப் பேசிக் கொண்டிருந்த மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தற்போது தூத்துக்குடியில் தனது தலைப்பை மாற்றி. ‘பாசமிகு பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்று நீட்டி முழங்கிக் கொண்டிருக்கிறாராம்.பாஜவுக்கு யார் மீதெல்லாம் பாசம் பொங்கி வழிகிறது என்று நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது.தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று பேரணி சென்ற போது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் படுகொலை செய்யப்பட்டபோது, உலகம் பூராவும் கண்டனக் கணைகள் எழுந்தன. ஆனால் போராடிய மக்களை சமூகவிரோதிகள் என்று சித்தரித்து, படுகொலையை நியாயப்படுத்தியது தான் பாஜக. அதன் பாசம் ஸ்டெர்லைட் முதலாளி அகர்வால் மீதுதான் என்பதும், அதன் பின்னே அவர்கள் பாஜகவுக்கு வழங்கிய 22 கோடி நன்கொடை இருக்கிறது என்பதும் ஒரு சில நாட்களில் ஊருக்கேதெரிந்துபோனது.தமிழ்நாடு முழுக்க எல்லோரும் கேட்டுக் கொண்டும், சட்டமன்றத்தில் தீர்மானமே நிறை வேற்றியும் அனைத்தையும் அம்பலப்படுத்தி மோடிஅரசு நீட் தேர்வைத் திணித்தது. கனவுகள் தொலைந்துபோன விரக்தியில் இளம் மாணவி அனிதா தற்கொலை செய்துகொள்ள, தமிழகமே பதைபதைத்துப் போய் அதிர்ச்சியில் உறைந்தது. பாஜகவோ, குற்றவுணர்வு எதுவுமின்றி, அனிதா மரணத்திற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று அறிக்கைவிட்டுக் கொண்டு, ஆதிக்க சக்திகள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழிசையின் முன்னிலையிலேயே இயக்குநர் அமீரைப் பேசவிடாமல் பாஜக ரௌடிகள் ரகளையில் ஈடுபட்டு அவரையே தாக்க முற்பட்டபோது, வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து, தனது கட்சி குண்டர்கள் மீது தமிழிசை பொழிந்த பாசத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா?முத்தாய்ப்பாக, விமானத்தில் தன்னோடு பயணம் செய்த கல்லூரி மாணவி, ‘பாசிச பாஜக ஒழிக’ என்று உண்மையைப் போட்டு உடைத்தத ற்காக, அந்த இளம் மாணவியை மிகுந்த வன்மத் தோடு சிறைக்கு அனுப்பி, இதே தூத்துக்குடியில் தனது அதிகாரத் திமிரை வெளிப்படுத்தினாரே தமிழிசை இதற்குப் பெயர் பாசமா, பாசிசமா?ஒன்றுமட்டும் நிச்சயம். பாசிச பாஜகவுக்கும் அதன் தலைவர் தமிழிசைக்கும் தூத்துக்குடி வாக்காளர்கள் தரப்போவது ‘படுதோல்வி’ தான் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.


க.மன்னன்

;