துரைமுருகன் வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் நுழைந்து சோதனையிட்டு இருப்பது மத்திய ஆட்சியாளர்களின் அதிகார ஆணவத்தை வெளிக்காட்டுகிறது.‘ரெய்டு’ நடவடிக்கைகளால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கலாம் என்ற “மோடி - எடப்பாடி கூட்டணி’’யின் வஞ்சகத் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. நரேந்திர மோடியின் ஐந்து ஆண்டுகால பாசிச எதேச்சதிகார அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களிடையே பேரலையாக எழுந்திருக்கின்றது. துரைமுருகனுக்கு எதிராக பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையை ஏவி விட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அரசு நிர்வாக இயந்திரங்கள் தன்னிச்சையாக இயங்க வேண்டிய நேரத்தில், மோடி அரசு எதேச்சதிகாரமாகச் செயல்பட்டு, தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ.உள்ளிட்ட அமைப்புக்களைத் தூண்டி விட்டு ரெய்டு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. இதுபோன்ற ரெய்டு நடவடிக்கையால் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கனியை தட்டிப்பறித்துவிடலாம் என்ற மோடி, எடப்பாடிகூட்டணியின் வஞ்சகத்திட்டம் ஒரு போதும் நிறைவேறாது என்றும் வைகோ மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளையும்,அதன் தலைவர்களையும், வேட்பாளர்களையும், ஊழியர் களையும், மிரட்டும் வகையில் பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பழிவாங்கும், அச்சுறுத்தும் நோக்கிலும்,மோடி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை எதிர்கட்சியினருக்கு எதிராக ஏவி விடுகிறார். அவர் ஒருகாபந்து பிரதமர் என்பதைமறந்து விட்டு, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத பாசிசப் போக்கை இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.