tamilnadu

img

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய் ஆளுநருக்கு வாலிபர் சங்கம் கடிதம்

கோவை, மே 20–பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை மேற்கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றியது. இருப்பினும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏழுவர் விடுதலையில் மௌனம் காத்தது. மத்திய அரசின் பிரதிதியாக உள்ள தமிழக கவர்னரும் சட்டமன்ற தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி நடந்த ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநர் முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.இதன் ஒருபகுதியாக கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை மேற்கொண்டனர். இக்கடிதத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ல் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். தமிழகமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்என குறிப்பிடப்பட்டுள்ளது.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால்நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நிசார் அகமது, அன்பரசன், பாலு, சேக் சம்சுதீன், ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.சசி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.வாசுகி, மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி நவீன்குமார், நகரக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

சேலம்

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தில் வாலிபர் சங்கத்தினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வாலிபர் சங்கமாவட்ட பொருளாளர் வி வெங்கடேஷ், வடக்கு மாநகர தலைவர் சதீஷ்குமார், வடக்கு மாநகர செயலாளர் ஆர்.வி.கதிர்வேல் உள்ளிட்ட ஏராளமான வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


;