tamilnadu

தாராபுரம் மற்றும் பல்லடம் முக்கிய செய்திகள்

இருசக்கர வாகனம் மோதி கூலித் தொழிலாளி பலி

தாராபுரம், மே 5 -தாராபுரத்தில், இருசக்கர வாகனம் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.தாராபுரம் அடுத்துள்ள கொளத்துப்பாளையம் ராமபட்டிணத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மொட்டையன் (61). இவர் பொருட்கள் வாங்குவதற்காக தாராபுரம் கரூர் ரோட்டில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது உடுமலைபேட்டையை சேர்ந்த பெரியசாமி மனைவி லட்சுமியுடன் மூலனூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமபட்டிணம் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்ற மொட்டையன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மொட்டையன் முதல் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த பெரியசாமி, லட்சுமி ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்: போதை ஆசாமிகளுக்கு தர்ம அடி

திருப்பூர், மே 5 –திருப்பூரில் குடிபோதையில் பேருந்து நடத்துநரைத் தாக்கிய இருவரை பொது மக்கள் அடித்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு அரசுப் போக்குவரத்துப் பேருந்து ஞாயிறு மதியம் வந்து கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பகுதியில் குடிபோதை ஆசாமிகள் இருவர் வழியை மறித்து நின்று கொண்டு பேருந்துக்கு வழிவிடவில்லை. இதையடுத்து பேருந்தின் நடத்துநர் ராமசாமி அவர்களிடம் வழிவிடுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பேருந்தில் ஏறி நடத்துநர் ராமசாமியைத் தாக்கத் தொடங்கினர். இதைப் பார்த்து பயணிகளும், பொது மக்களும் தாக்கியவர்களைத் தடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் நிதானமில்லாத நிலையில் தொடர்ந்து தாக்க முயன்றதால் பொது மக்கள் அவர்களைப் பிடித்து அடித்து உதைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த டெய்லர் ரவி, கட்டிட பணியாளர் சூர்யா என்பது தெரியவந்தது. இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர்.போதை ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த நடத்துநர் ராமசாமி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ரவி, சூர்யா இருவரையும் காவல் துறையினர் பிடித்துச் சென்றனர்.


பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், மே 5-திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29இல் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை பொதுத் தேர்வு ஜூன் 14 இல் தொடங்கி 20 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூ. 125, ஆன்லைன் கட்டணமாக ரூ. 50 என மொத்தம் ரூ. 175- ஐ பள்ளிகளில் செலுத்த வேண்டும். இதையடுத்து, தேர்வுக்கான அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து அனுமதிச்சீட்டில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

;