tamilnadu

மாணவர் சேர்க்கையை தொடங்காத அரசு பள்ளிகள்

கோவை, ஏப். 25-கோவையில் பேரூர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்பட அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தாமல் மூடிகிடக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வகுப்புகள், எல்கேஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கி வருகிறது. மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, மடிக் கணினிகள் வழங்கப்படுகின்றன.மேலும், அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அருகில் உள்ள பகுதிகளில் பெற்றோர்களை சந்தித்து மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான அரசு துவக்கப்பள்ளிகள் மாணவர் சேர்க்கையில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், கோவை பேரூர் ஊராட்சி ஒன்றிய அன்னை சத்யா நகர்ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்பட பல துவக்கப்பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்தாமல் மூடப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. இதனால், பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்க ஆர்வமாக வரும் பெற்றோர் திரும்பி செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாக அலட்சியம் காரணமாக துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாகஉள்ள பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வரும் நிலையில், கோவையில் துவக்கப்பள்ளிகள் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தாமல் இருப்பது பெற்றோரிடமும், பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் முருகன் கூறுகையில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், துவக்கப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், துவக்கப்பள்ளிகள் மூடி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்கப்படும். மேலும், துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

;