tamilnadu

img

கோபி கூட்டுறவு சங்கத்தில் மோசடி?

கோபி, ஏப். 26-கோபி கூட்டுறவு கட்டிட கடன் சங்கத்தில் முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்காமல் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வாஸ்து நகரில் கூட்டுறவு கட்டிட சங்கம் 1500 உறுப்பினர்களுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சுமார் ரூ.2.50 கோடிக்கும் மேல் இருப்புத் தொகையாக முதலீடு செய்துள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் வட்டியும் முதிர்வடைந்த பணத்தை திருப்பியும் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வைப்புத் தொகைக்கு வட்டிகொடுக்காமலும், முதிர்வடைந்த தொகைகளை திருப்பிகொடுக்காமலும் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் சங்கத்திற்கு சென்று வைப்புத் தொகையை திரும்பக் கேட்டுள்ளனர். அதற்கு சங்க நிர்வாகிகள் தற்போது வங்கியில் போதிய பணம் இல்லை. கொடுக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் திரும்ப வரவில்லை என்றும், கடன் தொகைகள்திரும்ப கிடைத்தவுடன் முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதனால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல்சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் முறைகேடுசெய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். வைப்புத் தொகை செலுத்தியுள்ள முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் வைப்புத்தொகை உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வட்டி சரியான முறையில் தரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கூட்டுறவு கட்டிட சங்கத்தில் கேட்ட போது வீட்டுக்கடன்கொடுத்த தொகைகள் திரும்ப கிடைக்காததினால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் போயுள்ளது தற்போது முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பிக்கொடுக்க சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தையும் காலியிடத்தையும் விற்பனை செய்யவுள்ளோம். விற்பனை செய்தவுடன் முதலீட்டாளர்களுக்கு வைப்புத்தொகை திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

;