tamilnadu

திருப்பூரில் கலவரம் செய்த இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 திருப்பூர், ஏப். 9 –திருப்பூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புகுந்து கலவரம் செய்த இந்து முன்னணி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக திமுக மாநகரச் செயலாளர் மு.நாகராசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சு.சிவபாலன், கொமதேக மாநகர் மாவட்டச் செயலாளர் ரோபோ ரவி, முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் என்.முஸ்தபா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு மாவட்டத் தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமிக்கு செவ்வாயன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:திருப்பூர் கரட்டாங்காட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக 8ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.க.தலைவர் கி.வீரமணி, திமுக மாவட்டச் செயலாளர் க.செல்வராஜூடன் வந்தபோது, திடீரென இந்து முன்னணி, பாஜகவைச் சேர்ந்த சுமார் 50 பேர் செல்வராஜின் காரின் மீது கல் வீசித் தாக்கி கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர். அமைதியாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையின் பாதுகாப்பு இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்துமுன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியமும், அவரது மகனும் பாஜகவைச் சேர்ந்தவருமான தங்கராஜூம் தான் இதற்கு மூலகாரணம். இவர்கள் ஏற்கெனவே பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே மேற்கண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

;