tamilnadu

வாக்காளர்களுக்கு பணம், மதுபாட்டில் கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், ஏப். 23 -திருப்பூர் வடக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு பணமும், மதுபாட்டிலும் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமியிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட 168 முதல்174 வரை உள்ள 7 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு அதிமுக 33ஆவது வார்டு எம்ஜிஆர் மன்றச் செயலாளராக இருக்கும், டாஸ்மாக் மதுக்கடை பார் நடத்தி வரும் பா.கருப்புசாமி பணமும், மதுபாட்டிலும் கொடுத்திருக்கிறார்.இது குறித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கடசி நிர்வாகிகள் வாக்குச்சாவடி அருகில் இருந்த காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கருப்பசாமியிடம் பணமும், மதுபாட்டிலும் வாங்கவும், அபகரிக்கவும் சிலர் முயன்றதால், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். அப்போது அவர் தடுமாறி விழுந்ததில் வாக்குச்சாவடி ஆவணங்கள் சில கீழே விழுந்தன. அவற்றை எடுத்த பொது மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வாக்குச்சாவடி முகவர்களான ஆர்.ரத்தினசாமி, மணி என்கிற பொன்னுசாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அதில் யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்று பெயர், அலைபேசி எண்கள் விபரம் எழுதப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்களுக்குப் பணமும், மதுபாட்டிலும் கொடுத்த சமூக விரோதி கருப்பசாமி மற்றும் அவருடன் இருந்த அதிமுக நிர்வாகிகள் பொன் ராஜேந்திரன், வினோத், மணி, மணிவண்ணன், விஜய் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த சம்பவத்தில் குற்றத்தை மறைப்பதற்காக கருப்புசாமி அரசு மருத்துவமனையில் சேர்ந்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் மீது பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார்.எனவே இதில் முழு விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீதும், பணம் கொடுப்பதற்கு மூலகாரணமாக இருந்த வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.இதற்கிடையே கருப்பசாமி கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தவறிழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு மாறாக, பொய் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருப்பதை ரத்து செய்வதுடன், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி புகார் கடிதம் எழுதியுள்ளார்.



;