tamilnadu

img

கோவையில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை, 17 லட்சம் அபராதம் வசூல்

கோவை மாநகர பகுதியில் இதுவரை 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதில் 150 முதல் 190 பேர் வரை கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கண்டறியப்படுகின்றனர். எனவே கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கண்டறிய மருத்துவ முகாம்கள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதியவர்களின் விவரம், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த முகாம்கள் மூலம் இதுவரை 5 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள்கூறுகையில், 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்கிழமை  வரை 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 3,629 பேர் குணமடைந்து உள்ளனர். மீதம் உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் தவிர வீடுகளில் 946 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இதுவரை ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறியதாக 491 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதுடன், 49 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சியில் 6,263 வீதிகள் உள்ளன. இதில் 5,665 வீதிகளில் கொரோனா பாதிப்பு இல்லை. 113 வீதிகளில் 3 நபர்கள் அல்லது அதற்கு மேல் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். 485 வீதிகளில் 3 நபர்களுக்கு கீழ் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.

மாநகராட்சி முழுவதும் இதுவரை 4,200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதன்மூலம் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுதாக கூறியுள்ளனர்.
 

;