ஜூலை 30- பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் 10 மாத குழந்தையை அடித்துக் கொன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர் . கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு கருப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (30). இவரது மனைவி முத்துமாலை (28). இவர்களுக்கு தர்ஷினி என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது. திங்களன்று காலை முத்துமாலை தனது வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்த போது அங்கு வந்த குமாரின் அப்பா செல்வராஜ் என்பவர் முத்துமாலை கையில் இருந்த குழந்தை தர்ஷினியை பிடிங்கி முத்துமாலையை கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து முத்துமாலை தனது கணவர் குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பின்னர் குமார் தனது அப்பா செல்வராஜையும் குழந்தை தர்ஷினியையும் தேடினார்கள். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் கிடைக்காததால் குமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல் துறையினர் குழந்தையைக் கடத்திச் சென்றதாக செல்வராஜ் மீது வழக்குப் பதிவு செய்து தேடிய நிலையில், கிணத்துக்கடவு ரயில்நிலையத்தில் அவரை கைது செய்தனர். விசாரணையில், ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தொப்பம்பாளையம் பிரிவு பகுதியில் குழந்தையை அடித்து கொலை செய்ததாகக் கூறினார். இதனையடுத்து குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசுமருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் செல்வராஜின் இரண்டாவது மனைவி சக்திகனி என்பவர் தன்னை விட்டு பிரிந்து செல்லகாரணம் தனதுமகன் குமாரும், மருமகள் முத்துமாலையும் தான் என நினைத்து குழந்தையை கடத்தி சென்று கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.