tamilnadu

பறக்கும் படை பறிமுதல் செய்த பணத்தை ஆவணங்களை காட்டி பெற அழைப்பு

ஈரோடு, ஏப்.7-தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை கொண்டு சென்றால் உரிய ஆவணங்களை இருக்க வேண்டும், இல்லையென்றால் பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால், ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 லட்சத்து 70 ஆயிரத்து 816 ரூபாயும், ஈரோடு மேற்கு தொகுதியில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 110 ரூபாயும், மொடக்குறிச்சி தொகுதியில் 30 லட்சத்து 99 ஆயிரத்து 190 ரூபாயும், பெருந்துறை தொகுதியில் 26 லட்சத்து 67 ஆயிரத்து 220 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல பவானி தொகுதியில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 650 ரூபாய், அந்தியூர் தொகுதியில் 24 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயும், கோபி தொகுதியில் 9 லட்சத்து 82 ஆயிரத்து 660 ரூபாய், பவானிசாகர் தொகுதியில் 16 லட்சத்து 59 ஆயிரத்து 350 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் ஒரு கோடியே 86 லட்சத்து 17 ஆயிரத்து 996 ரூபாய் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஒரு கோடியே 23 லட்சத்து 96 ஆயிரத்து 656 ரூபாயை அதிகாரிகள் திருப்பி வழங்கியுள்ளனர். மீதமுள்ள 62 லட்சத்து 26 ஆயிரத்து 350 ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த பணத்திற்கு உரியவர்கள் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ள மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;