tamilnadu

img

ஒற்றுமையுடன் ஒரு தேசிய விழா...பி.எம்.மனோஜ்

கேரள மக்களுக்கு ஓணம் மற்ற எல்லா விழாக்களையும்விட பெரிய விழாவாகும். கேரள மக்களின் சமத்துவ உணர்வின் அடிப்படை அம்சங்களில் ஒன்று ஓணம் குறித்த கனவாகும். செழிப்பு, சமாதானம், சமத்துவம் ஆகியவைதான் “மனிதரெல்லாம் ஒன்று போலே’’ என மாவேலி நாடுகூறும் செய்தி.

எல்லாவிதத்திலும் நன்மைகள் நிறைந்த ஒரு காலம் இருந்தது என்பதை ஓணத்தைப் பற்றிய ஐதீகம் நமக்கு நினைவூட்டுகிறது. திருட்டு, துரோகம், பொய் இவை எதுவும் இல்லாததும், நல்ல மழை பெய்து விளைச்சல் பெருகுவதும்  மக்கள் நீதியோடு எங்கும் வாழ்ந்திருந்ததுமான அந்தக் காலம் இன்றும் நம்மை ஈர்க்கிறது. அத்தகையப் பாரம்பரியச் சிறப்புக் கொண்டிருப்பதனால்தான் ஓணத்தை நமது நெஞ்சில் ஏற்றிக் கொண்டாடுகிறோம். சாதி, மத வேற்றுமைகளுக்கு அப்பால் ஒற்றுமையுடன் ஒரு தேசிய விழாவாக ஓணம் கொண்டாடுவதுதான் இந்த காலகட்டத்தின் அரசியலாகும். 

எல்லா கஷ்டங்களும் தீர்ந்தபிறகு இந்த விழாவைக் கொண்டாடினால் போதும் என்று நாம் கருதுவதில்லை. கவலைகளைமறப்பதற்கான சந்தர்ப்பமாகக் கொண்டாட்ட ங்களை நாம் பயன்படுத்துகிறோம். எல்லா கஷ்டங்களும் தீர்ந்தபிறகுதான் கொண்டாட்டங்களில் பங்கேற்பேன் என்று ஒருவர் பிடிவாதமாக இருந்தால் அவரால் எப்போதும் எந்தக்  கொண்டாட்டத்திலும் பங்கேற்க முடி யாது.சிறிதோ, பெரிதோ - சாதி மத பேதமே இல்லாத ஒரே மனதுடன் கேரளத்தில் நாம் ஓணத்தை வரவேற்கிறோம். பூக்களமும் புத்தாடைகளும் மற்றும் பலவகை சுவையுள்ளஉணவு வகைகளுடனும் கேரள மக்கள் ஓணக் கொண்டாட்டத்தைச் சிறப்படையச் செய்கிறார்கள்.

மலையாளிகளும் தமிழ்ச் சகோதரர்களும்
ஒருவிதத்தில் மலையாளிகளின் ஓணம் தமிழ்ச் சகோதரர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. கேரளம்உணவுத் தேவையில் தன்னிறைவு பெறாத மாநிலமாகும்.ஓணம் விருந்து உண்பதற்கு அரிசி மற்றும் காய்கறிகளும், பூக்களம் அமைப்பதற்குப் பூக்களும் தருகிறவர்கள் தமிழ்ச் சகோதரர்கள்தான்.இந்திய தேசத்தில் ஓணம் எனும் கொண்டாட்டத்திற்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. இன்று நாம் சந்திப்பது வெறுப்பு அரசியலாகும். இதற்கு மாறான விதத்தில் மகாபலியின் வாழ்க்கைச் செய்தி கூறுவது சமத்துவம், சமத்துவ உணர்வு, நேர்மை ஆகியவை ஆகும். 

மகாபலி ஒரு அசுர சக்கரவர்த்தியாக இருந்தார் என்று கற்பிக்கப்படுகிறது. சமத்துவ சமுதாயம் அமைவதை சகிக்காத தேவர்கள்,அந்த அசுர சக்கரவர்த்தியை வஞ்சனையால் வாமனன் மூலம் மிதித்து பாதாளத்திற்குள் தள்ளினார்கள். ஓணம் நாளில் மலையாளிகள், துரோகத்தின் மூலம் நாடு கடத்தப்பட்ட மகாபலி என்ற அசுர சக்கரவர்த்தியின் பக்கம் நிற்கிறார்கள். நீதி, நியாயம்எங்கிருந்தாலும் அதனுடன் சேர்ந்து நிற்க வேண்டும் என்ற செய்தியும் இதில் உள்ளது. மகாபலியை ஒதுக்கிவிட்டு அதற்குப்பதிலாக ஓணத்தை வாமன தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வாதிப்பவர்களையும் அண்மையில் பார்த்தோம். எல்லாத்துறைகளிலும்  வாமன ஆட்சியை விரும்புகிறவர்கள் அவர்கள். அத்தகையவர்களுக்கு எதிராக விழிப்போடு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஓணம் விழா நமக்கு நினைவூட்டுகிறது.மனித ‘தெய்வங்களும்’, மதவாத சக்திகளும் தேசத்தின் பாரம்பரியம், அரசியல் சட்டம்,சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய அறநெறிகளுக்குச் சவால்விடுகிற  இன்றைய சூழலில்  ஓணத்தின் சமத்துவச் செய்தியை ஒவ்வொரு இந்தியனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

கட்டுரையாளர் :  கேரள முதல்வரின் ,தனிச் செயலாளர்

;