tamilnadu

img

நெருக்கடியில் கோவை சிறு,குறு பவுண்டரிகள் வேலையிழந்ததால் சொந்த ஊருக்கு சென்ற 40 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள்

3 ஷிப்ட்கள் ஒரு ஷிப்ட் ஆனது

“சிறுகுறு பவுண்டரி அதிபர் சங்கத்தினர் கூறுகையில்,  சிறு, குறு பவுண்டரிகளில் தற்போது 50 சதவிகிதத்திற்கும்மேல் உற்பத்தி குறைந்து போனதால் மூன்று ஷிப்ட்டுகளாக நடைபெற்று வந்த உற்பத்தி பணிகள் தற்போது ஒரு ஷிப்ட்டாக குறைக்கப்பட்டும், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக சிறு, குறு பவுண்டரிகளில் உற்பத்தி பெருமளவு  குறைந்து போனதுடன் , இதில்  பணிபுரிந்து வந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை இழந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்கின்றனர்” என வேதனையுடன் தெரிவித்தனர். 

நெருக்கும் வங்கிகள்

பவுண்டரி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், பவுண்டரிகளில் பணிபுரிந்து வந்த பயிற்சி பெற்ற வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு ஊர்களுக்கு திரும்பிச் செல்வதால் அவர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பெயரளவிற்கு பவுண்டரிகளை இயக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் இத்தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது என விழிபிதுங்கி நிற்கையில், மறுபுறம் தொழிலின் நெருக்கடியை உணர்ந்தும் வங்கி் நிர்வாகங்கள் , வங்கியில் பெற்ற  கடனை வேகமாக திருப்பி செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுக்கின்றனர். இத்தொழில் மீண்டுவரும் வரை அசல் தொகையை நிறுத்திவைத்துவிட்டு வட்டி மட்டும் கட்டுவதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் இருப்பதை விற்றுத்தான் வங்கிக்கு பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.  

டெக்ஸ்டைல், வாகன உற்பத்தி என அடுத்தடுத்து தொழில் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கோவையில் உள்ள பவுண்டரி தொழில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கோவையில் உள்ள சிறுகுறு பவுண்டரிகளில்  40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை இழந்து ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட தங்களது சொந்த மாநிலங்களுக்கே  சென்றுவிட்டனர். இதனால் தொழிலை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக சிறுகுறு பவுண்டரி தொழிற்சாலை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மந்தமான சூழல் நிலவுகிறது. வேலையின்மை அதிகரிப்பு, நிரந்தரத் தொழிலில் உள்ளவர்கள் வெளியேற்றம், ஐடி துறையில் வேலையிழப்பு என தொடர் நெருக்கடியை நாடு சந்தித்துக்கொண்டுள்ளது. இதன்காரணமாக வாங்கும் சக்தி இழந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அளவுக்கதிகமாக தேங்கிக்கிடக்கின்றன. சிறுகுறு தொழில்களை விழுங்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கபளீகரம் ஒரு புறம் என்றால், மத்திய அரசின் நிர்வாகத்திறனின்மை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் கொள்கை முடிவு என நாட்டின்  ஒட்டு மொத்த துறையும் கோமா நிலையில் உள்ளது. இதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும்  என்கிற தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு கானல் நீராகவே உள்ளது.  இந்நிலையில் சங்கிலித்தொடராய் உள்ள நமது தேசத்தின் தொழில்கள் ஒன்று நெருக்கடிக்குள்ளானால் அடுத்தடுத்து பாதிக்கும் என்பதற்கு சாட்சியமாக தற்போது பவுண்டரி தொழில் பாதாளத்திற்குள் விழுகிற நிலை ஏற்பட்டுள்ளது.  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுகிற  கோவையில் பஞ்சாலையைக் கடந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழில்கள் இயங்கி வருகின்றன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொள்கையால் பெரும் பாதிப்பில் இருந்து மீளாத சிறுகுறு தொழில்கள் தற்போது வாகன உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள மந்தம் காரணமாக பெரும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக பவுண்டரி தொழில்கள் கடுமையான பதிப்பை சந்தித்து வருகின்றன.  மோட்டார் வாகனங்கள், விமானங்கள், ரயில்கள், மோட்டார் பம்ப்புகள், கிரைண்டர் என அனைத்து தொழில்களுக்கும் அடிப்படையானது  பவுண்டரி தொழில் (வார்ப்படம்).இதில் 150க்கும் மேற்பட்ட பெரிய பவுண்டரிகளும்,  400க்கும் மேற்பட்ட சிறு, குறு பவுண்டரிகளும் இயங்கி வருகின்றன. சிறு-குறு பவுண்டரிகளில் மட்டும் சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும்,  2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி காரணமாக பெரிய பவுண்டரி ஆலைகளுக்கு வரும் ஆர்டர்கள் அனைத்தும் பெருமளவில்  குறைந்துபோயுள்ளது. இவற்றை சமாளிக்க மோட்டர் பம்ப்செட், கிரைண்டர் ஸ்பேர்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் சிறு,குறு பவுண்டரிகளின் ஆர்டர்களை, பெரிய பவுண்டரிகள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தங்கள் வசம் எடுத்துக் கொள்கின்றன. இதனால்  சிறு, குறு பவுண்டரிகளின் உற்பத்தி தற்போது முடங்கி வருகின்றது.  கோவையில் நன்கு பயிற்சி பெற்ற வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ பணிக்கு செல்லும் நிலையில், இத்தொழிலில் பணிபுரிய தகுதியான நபர்களை கண்டறிவது கடினம். அனைத்து தொழில்களின் அடிப்படையான அம்சமாக  இருக்கும் வார்ப்பட தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது அடுத்தடுத்து உள்ள சிறு, குறு தொழில்துறைகளையும், பெருநிறுவனங்களையும் கண்டிப்பாக  பாதிக்கும். மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வார்ப்பட தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோவை  தொழில் முனைவோரின்  எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. 
எங்கள் ஊரில் வேலை இல்லாமல் தான் இங்கு வந்தோம்...
ஒரிசாவை சேர்ந்த ராஜேந்திரசிங் மொகந்தி என்கிற வடமாநில தொழிலாளி:  “எங்கள் ஊரில் வேலை இல்லை என்றுதான் பத்து வருடத்திற்கு முன்பு இங்கு வந்தோம். எந்த தொழிலும் தெரியாத நிலையில் இருந்த எங்களுக்கு இங்குள்ளவர்கள் வேலைக்கான பயிற்சி அளித்து உணவு, ஊதியம் என கைநிறைய அளித்தனர். இரவு பகல், ஓவர்டைம் என இடைவிடாமல் பணிபுரிந்து வாரம் 4 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து இங்குள்ள செலவு போக எங்கள் ஊரில் உள்ள தாய், மனைவிக்கு அனுப்பினோம். கடந்த ஒரு சில ஆண்டுகளாய் வாரம் 2 ஆயிரம் ரூபாய் கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கிறது. முந்தைய ஊதியத்தை கணக்கிட்டு தற்போது இங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறோம். இப்போது இந்த ரூபாய் இங்கேயே பற்றாக்குறையாக உள்ளது. இதில் ஊருக்கு எப்படி அனுப்புவது? முன்பு மோடி ஜி ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னப்போ ஒரு மாதம் வேலை இல்லாம போச்சு, அப்புறம் ஜிஎஸ்டின்னு சொன்னாங்க, அது என்னான்னு எனக்கு தெரியல. இப்ப ஆர்டரே இல்ல எப்படி வேலைக்கு வெச்சுக்கிறதுன்னு முதலாளி சொல்றார். வேலை இல்லைன்னா வந்துருன்னுதான் ஊருலயும் சொல்றாங்க. ஆனா அங்கேயும் வேலை இல்ல, விவசாயம் இல்லைன்னுதான் இங்கே வந்தோம். இங்கேயும் இதே நிலைன்னா என்ன பன்றது. என்கூட எங்க ஊர் பசங்க 300 பேருக்கு மேல பவுண்டரில வேல பாத்தாங்க. இந்த மூனு மாசத்துல எல்லோரும் எங்க ஊரைப் பாத்து போய்ட்டாங்க. இப்ப 40 பேரு மட்டும்தான் நாங்க இருக்கிறோம். நாங்களும் என்ன பன்றதுன்னு தெரியாமத்தான் இருக்கிறோம். கொஞ்சநாள் இருங்க எல்லாம் சரியாயிடும்ன்னு முதலாளி சின்னசின்ன வேலை கொடுத்து சாப்பாடு போடுறார். ஆனா அதுமட்டும் போதுங்களா ஊருல குழந்த, மனைவி எல்லா இருக்காங்கல்ல…

;