tamilnadu

img

வெற்றிகரமான வெளிநாட்டுப் பயணம்: நடுத்தர சிறு தொழில்களுக்கு உதவும் ரூ.200 கோடிக்கான முதலீடுகள் உறுதி

திருவனந்தபுரம்:
வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்லும்மாநில அரசின் முயற்சிகளுக்கு தனது வெளிநாட்டுப் பயணம் பாய்ச்சல் வேகத்தை அளிக்கும் எனவும், ஜப்பானிலும், கொரியாவிலும் அவர் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக ரூ.200 கோடிக்கான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதுகுறித்து சனியன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேரளத்தின் உயர்கல்வி, சுகாதாரம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம், உணவு பதப்படுத்தல், மீன்பிடித்தல், கழிவு மேலாண்மை, திறன் மேம்பாடு, பேரழிவு மேலாண்மை போன்ற துறைகளில் நன்மை பயக்கும் பயணமாகும். கேரள இளைஞர்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட பயணம் இது. அங்கு நடந்த ஒவ்வொரு சந்திப்பும் இளைஞர்களுக்கு பயன்படும். சர்வதேச தரத்தில் உள்ள உயர்கல்வி, நவீன காலத்துக்கு உகந்த தொழில் வளர்ச்சியை கேரளம் பெறுவது உறுதி செய்யப்பட்டது.       

ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் இப்போதே கேரளத்தில் முதலீடு செய்துள்ளன. அவர்களுக்கு கேரளத்தைக் குறித்து பெரும் மதிப்பு உள்ளது. இந்த சாதகமான அம்சத்தை கூடுதல் தகுதியாக பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறு தொழில்களிலும், தொழில்நுட்ப அடிப்படையிலான புதுமையான தொழில்களிலும் ஜப்பான் முன்னிலையில் உள்ளது. இவை கேரளத்துக்கு உகந்தவை. அவற்றை இயன்றவரை கேரளத்துக்கு கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ரூ.200 கோடிக்கான முதலீடு கேரளத்துக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. ஜப்பானிலிருந்து மட்டும் நூற்றுக்கணக்கான கோடிகள் கேரளத்துக்கு முதலீடாக வரும். கேரளத்தில் நான்கு நூற்றாண்டு கால அனுபவரம் உள்ள ‘நீதா ஜெலட்டின்’ செயல்பாடுகளை விரிவாக்க ரூ.200 கோடி முதலீடு வரும். இது மாறியுள்ள கேரளத்தில் முதலீட்டு நட்பு சூழலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.

தெர்மோ கார்ப்பரேசன், திருவனந்தபுரத்தில் உள்ள தெர்மோ பென்போளின் ரூ.105 கோடிக்கு முதலீடு செய்யும். உலகம் முழுவதற்கும் தேவையான ரத்த வங்கிகளின் தேவையில் 10 சதவிகிதம் கேரளத்தில் உற்பத்தி செய்ய முடியும். லித்தியம் டைட்டானியம் ஆக்சைடு பேட்டரி தயாரிப்புக்கான தொழில் நுட்பத்தை தோஷிபாவுடன் பரிமாறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 2022 க்குள் கேரளத்தில் 10 லட்சம் மின் வாகனங்களை சாலைகளில் இறக்குவதற்கென இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்டிஓ பேட்டரியை பயன்படுத்தலாம்.

ஜப்பானிலிருந்து 5 மேயர்கள் வருகை
எதிர்கால எரிபொருள் என கருதப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழிற்சாலை நிறுவுவதற்காக டொயோட்டோவுடன் விவாதிக்கப்பட்டது. இந்த விசயத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யலாம் என அரசு கருதுகிறது. எர்ணாகுளம் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் லூப்ரிகன்ட் ப்ளெண்டிங் யூனிட் நிறுவ ஜிஎஸ்கால்டெக்ஸ் கார்ப்பரேசன் விருப்பம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில் நுட்பத்திலும், ஆயுர்வேதத்திலும் சிறு நடுத்தர தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை நேரடியாக பார்த்து தெரிந்துகொள்ள ஜப்பானின் சனின் மாகாணத்திலிருந்து 5 மேயர்களை உள்ளடக்கிய குழு கேரளத்திற்கு வருகைதர உள்ளது.டோக்கியோவில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கமத்தில் சுமார் 150 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். கட்டுமானம், தொழில்துறை கட்டமைப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல் மையம் (மார்க்கட்டிங் பப்), சுகாதாரம், சுற்றுலா, ஐ.டி, பயோ டெக்னாலஜி, விவசாய தொழில்கள் போன்ற துறைகளில் கேரளத்தில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கேரளத்தில் தற்போது முதலீடு செய்துள்ள நிஸான், ப்ளாஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் கேரளத்தில் தற்போதுள்ள சாதகமான சூழ்நிலைகளை புகழ்ந்தன. இது கேரளத்துக்கு மேலும் முதலீடுகளை கொண்டுவர உதவும். ஜப்பானிய வெளி வர்த்தக அமைப்பு திருவனந்தபுரத்தில் தங்கள் அலுவலகங்களைத் திறக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

கொரியா பயணம்
 ஜப்பானைப்போன்றே சிறிய நடுத்தர தொழில்களில் முன்னிலை வகிக்கும் நாடாகும் கொரியா. தொழில்நுட்ப கல்வியிலும் அதிநவீன தொழில்களிலும் உலகத்திலேயே முன்னிலை வகித்து வருகிறது. கொரியாவுக்கு கேரளத்தை அறிமுகம் செய்வது என்பதே கொரிய பயணத்தின் முக்கிய நோக்கம். கடல் உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் பங்காளர்களைக் கண்டுபிடிக்க கொரியா உணவு தொழில் மேம்பாட்டு சங்கம், உணவு பதப்படுத்தும் தொழில்களின் தலைவர்களை அடுத்த மாதம் கேரளத்துக்கு அனுப்புகிறது. கொரியா வர்த்தக மேம்பாட்டுக் கழகமும் உணவு பதப்படுத்துதலில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளது.சேர்த்தலா உணவு பதப்படுத்தும் பகுதியை பார்வையிடவும், கேரளத்தில் இந்த துறையை ஆய்வு செய்து தொடர்ந்து ஏற்றுமதி செய்யவும் கொரிய இறக்குமதியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. கேஎஸ்ஐடிசி-யின் சேர்த்தல உணவு பூங்காவில் ஒரு ஆய்வு மையம் தொடங்கவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் வியட்நாம் வழியாக சென்று கொண்டிருக்கிறது. ஆய்வு மையம் வருவதைத் தொடர்ந்து நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியும்.ஹுண்டாய் வாகன உதிரி பாகங்கள் விநியோகம் செய்யும் எல்கே ஹை-டெக் நிறுவனம் ஒரு புதிய தயாரிப்பு ஆலை தொடங்க பாலக்காட்டில் 15,000 சதுர அடி நிலம் கேட்டுள்ளது. ஐ.டி, எல்இடி தயாரிப்பு, வாகன உதிரி பாகங்கள், உணவு பதப்படுத்தல், நடுத்தர- சிறு தொழில்கள், பொருள் போக்குவரத்து, விநியோக சங்கிலி போன்ற துறைகளில் முதலீடு செய்ய கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.  

எல்டிஎப் வாக்குறுதி
கேரளத்தின் வளர்ச்சி தொடர்பாக செய்ய வேண்டியவை இடது ஜனநாயக முன்னணியின்தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலத்துக்கு இணக்கமான அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் முதலீடுகளையும் நவீன தொழில்களையும் ஈர்க்க, கேரளத்திலேயே உற்பத்தி செய்வதை அதிகரிக்க, வளங்களின் நேர்மையான விநியோகம். இவை அனைத்தும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி மாநிலத்தின் பல துறைகளிலும் முன்னேற்றம் காண முடிந்துள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதும் அவற்றை நேர்மையாக விநியோகம் செய்வதும் மட்டுமே மக்களின் வாழ்க்கையை தரமான முறையில் முன்னேற்ற உதவும். அதற்கு அறிவியல் தொழில்நுட்ப துறையில் மனிதகுலம் பெற்ற அத்தனை அறிவும் நாட்டின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் உற்பத்தி துறையில் பெரும் மாற்றம் ஏற்படும். ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் இந்த அடிப்படையில் பெரமளவில் முன்னேறியுள்ளன என்று முதல்வர் கூறினார்.

;