கொச்சி, ஜுன் 16- கப்பல் ஊழியர்களை துயரக் கடலில் தள்ளியிருக்கிறது கோவிட் காலம். நாடு முழுவதும் உள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாலுமிகள் பணிக்காலம் முடிந்தபிறகும் வீடு திரும்ப முடியாமல் உலகமெங்கும் உள்ள கடற்பரப்பில் சிக்கி உள்ளனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் உள்ளனர். கப்பல் நிறுவனங்களில் இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகள் நிலையில் உள்ளவர்களுக்கு சாதாரணமாக 4 முதல் 5 மாதங்கள் ஒப்பந்த காலம். ஊழியர்களின் நிலையைப் பொறுத்து ஒப்பந்தத்தின் கால அளவு மாறும். ஒப்பந்த காலம் முடியும் ஊழியர்கள் கப்பல் நிறுத்தப்படும் துறைமுகத்தில் இறங்கி ஊர் திரும்புவர். புதிய ஊழியர்கள் பணியை தொடர்வார்கள். கோவிட் நோய் தொற்றைத் தொடர்ந்து சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அத்தகைய ஊழியர் மாற்றம் நடைபெறவில்லை.
இதுவே மாலுமிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை. தனிநபர்கள் வாடகைக்கு எடுத்து இயக்கும் சார்ட்டர் விமானத்தில் பயணம் செய்யலாம் என்றால் அதற்கான கட்டணம் அதிகமாகும். எனவே கப்பல் கம்பெனிகள் அதற்கு முன்வரவில்லை. வெளிநாட்டு துறைமுகங்களில் ஊழியர்கள் இறங்கலாம் என்றாலும் பிரச்சனைதான். அவர்கள் அங்குள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிமைக் காலத்தை நிறைவு செய்ய வேண்டும். அதற்கும் பெருந்தொகை செலவாகும். இந்திய ஊழியர்கள் அருகில் உள்ள கொழும்பு, சிங்கப்பூர் ஆகியவை இடங்களில் சுழற்சி முறையில் பணி மாற்றிக்கொள்வர். மாலுமிகளின் துயரைப் போக்க இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தலையிட வேண்டும். பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்களை தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகளை கப்பல் துறை அமைச்சகம் செய்ய வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான ஏற்பாடு எதையும் செய்யவில்லை. கப்பல்களில் சிக்கியுள்ள ஊழியர்கள் மட்டுமல்லாது, தற்போது கரையில் உள்ள மாலுமிகளும் சிக்கலில் உள்ளனர். கப்பலில் வேலைக்கு நுழைந்தால் மட்டுமே இவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். மத்திய அரசின் தலையீடு இல்லாதது ஆயிரக்கணக்கான கப்பல் ஊழியர்களின் குடும்பங்களை பெரும் கவலையில் தள்ளி விட்டுள்ளது.